தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய ஊராட்சி தலைவர் கைது

பெரும்புதூர், ஏப்.24: ஒரகடம் அருகே தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரிடம், மாமூல் கேட்டு மிரட்டி தாக்கிய வழக்கில் வளையங்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (49). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தொழிற்சாலைக்கு சொந்தமாக, வடக்குப்பட்டு பகுதியில் மற்றொரு தொழிற்சாலை கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி நடைபெறும் இடத்திற்கு, வளையங்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், அடிக்கடி சென்று மாமூல் பணம் கேட்டு மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சுப்பிரமணி பணியில் இருந்தபோது ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர், அங்கு சென்று பணம் கேட்டு சுப்பிரமணியை மிரட்டியுள்ளார். அவர், பணம் தர மறுத்து ராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜன், சுப்பிரமணியை கன்னத்தில் அறைந்தாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் ஒரகடம் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: