காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஏப்.23: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் இன்று முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வண்ணமும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வண்ணமும், வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் கூடுதல் வழிகாட்டுதலும், திருத்திய கால அட்டவணையும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.

எதிர்வரும் 2024-2025ம் கல்வியாண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 139 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிகுலேஷன்/மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) நுழைவுநிலை (LKG) வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1889 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே (இன்று முதல்) இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். மேற்காண்ட சேர்க்கைக்காக விண்ணப்பங்களை Online வழியே இன்று முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (SSA), மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை, மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் யன்படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்ஐவியினால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்பரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். அரசுக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: