ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராஜஸ்தானில் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்புவதற்காக தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார். பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கண்டறிந்து மறுபங்கீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

தேசத்தின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று கடந்த 2006ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். அதாவது அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கும், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது என்று அடிப்படையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசினார். இவரது வெறுப்பு பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதன் விவரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி: நாட்டில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. ஆனால் மோடி ‘எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்று கூறுகிறார். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டுள்ளார். அவர் நச்சு மொழியில் பேசுகிறார். ஆனால் பொய்களின் வியாபாரத்தின் முடிவு நெருங்கிவிட்டது . காங்கிரஸ்

தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே: இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. இன்று, மோடியின் அவநம்பிக்கையான பேச்சு, முதல் கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டுகிறது. மோடி கூறியது நிச்சயமாக வெறுப்பூட்டும் பேச்சு, ஆனால் இது கவனத்தை திசை திருப்பும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாகும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் கற்றதை இன்று செயல்படுத்தி உள்ளார். அதிகாரத்திற்காக பொய் சொல்வது, பொய்யான குறிப்புகளை வழங்குவது மற்றும் எதிரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவினருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். நாட்டின் 140 கோடி மக்கள் இனி இதுபோன்ற பொய்களுக்கு பலியாக மாட்டார்கள். எங்கள் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியர்களிடமும் உள்ளது. அனைவருக்கும் சமத்துவம் பற்றி பேசுகிறது. அனைவருக்கும் நீதி பற்றி பேசுகிறது. இதனால் கோயபல்ஸ் போன்ற சர்வாதிகாரியின் நாற்காலி இப்போது ஆடுவது போல் தெரிகிறது

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: பிரதமரின் கருத்துகள் கொடூரமானவை. தேர்தல் ஆணையத்தின் மவுனம் அதைவிடக் கொடுமையானது. மோடியின் ஆவேசப் பேச்சு, நடத்தை விதிகள் மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முற்றிலும் மீறுவதாகும். அவரது பேச்சு கடுமையான நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு தகுதியானது. இந்த வெறுப்பு பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, மோடிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பும் என்று நம்புகிறேன், அதைத் தொடர்ந்து கடுமையான தண்டனையும் வழங்கும் என்று நம்புகிறேன். இதுதொடர்பான மனு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே: மோடியின் கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் கடிதம் எழுத வேண்டும். தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கிறது. மோடி மற்றும் பாஜவுக்கு இலவச அனுமதியை வழங்கி வருகிறது. தேர்தல்களின் போது, ​​தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பேற்காது. ஆனால் அவர்கள் இந்திய மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் .

ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்: மோடியின் பேச்சு முதல் கட்டத் தேர்தல் முடிந்த உடனேயே பா.ஜ தோல்வியடைவதை உணர்ந்திருப்பதையே காட்டுகிறது. அவர்கள் நாட்டின் அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து, மோடியின் நண்பர் ஒருவருக்கு கொடுத்துள்ளனர். அவர் இந்த முறை மிகவும் மோசமாக தோற்பார் .

கேரள முதல்வர் பினராய் விஜயன்: மோடியின் கருத்து தேச விரோதமானது. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: முழுமையான பொய், வெட்கக்கேடான பொய். இதுபோன்ற மோசமான பேச்சுக்களை வேறு எந்தப் பிரதமரும் கூறியதில்லை. மக்களின் நிலம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் எப்போது, ​​எங்கு சொன்னது? பெண்களின் கைவசம் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு சொந்தமான வெள்ளிதனி நபர்களின் சொத்துக்கள், தங்கம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எப்போது, ​​​​எங்கே கூறியது?அரசு ஊழியர்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் பணமும் விநியோகிக்கப்படும் என்று காங்கிரஸ் எப்போது, ​​​​எங்கே கூறியது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளை திரித்து பேசுவது அவதூறானது. வெட்கக்கேடானது.

சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல்: வகுப்புவாத வெறுப்பை பரப்பும் இதுபோன்ற பேச்சுக்களை பிரதமர் மோடி ஒருபோதும் கூறியிருக்கக்கூடாது’ என்றார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி தலைவருமான மெகபூபா முப்தி, ‘மோடியின் இந்த கருத்துக்கள் பா.ஜ இந்த தேர்தலில் தோல்வி அடைவதை காட்டுகிறது’ என்றார். சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘பிரதமர் மோடி போன்ற மூத்த தலைவர் இது போன்ற கருத்துகளை கூறுவது வருத்தமளிக்கிறது’ என்றார்.

மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் இதுபற்றி கூறியதாவது: பிரதமரின்பேச்சைக்கேட்ட பிறகு கோடிக்கணக்கான மக்கள் ஏமாற்றம் அடைவார்கள். அநேகமாக 1950க்குப் பிறகு வேறு எந்தப் பிரதமரும் இப்படியொரு கருத்தைக் கொடுத்ததில்லை. இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக வாழும் நமது சிறுபான்மையினர் ஊடுருவல்காரர்கள் என்பதை அந்தப் பேச்சு சுட்டிக் காட்டுகிறது. இது என்ன அரசியல். இது என்ன கலாசாரம்? மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும். மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இதை மீண்டும் செய்யக்கூடாது என்று முறைப்படியும், நேரடியாகவும், ஐபிசி 153 ஏ கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: