மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

டெல்லி: மக்கள் ஒன்றியத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்கே, இளைஞர் வேலைவாய்ப்புகளை கேட்கிறார்கள். ஜனநாயகத்தை வாழ வைக்க வேண்டும் என்று நேரு எப்போதும் மக்களிடம் கூறுவார். அதேபோல், ஜனநாயகத்தை வாழ வைக்காவிட்டால் நாட்டில் சரியான ஆட்சி இருக்காது என்றார். பாஜக அரசு, தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறார்கள், நாட்டுக்காக எதையும் செய்யவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளில் பாஜக நாட்டிற்கு எதையும் செய்யவில்லை என்று கடுமையாக கூறினார். கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கார்கே நம்பிக்கை தெரிவித்தார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெற்று, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று கார்கே உறுதிபட கூறினார்.

தொடர்ந்து, ஹுப்பள்ளி நேஹா ஹிரேமத் கொலை வழக்கு குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், தேர்தலின் போது பலர் இந்த பிரச்னையை எழுப்புகின்றனர். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும், யாராக இருந்தாலும் நாங்கள் யாரையும் பாதுகாக்க மாட்டோம் என்றார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு 1 லட்சம் கொடுப்பது முஸ்லிம் லீக்கின் திட்டமா? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல உள்ளதாக விமர்சித்த பாஜகவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும்; அவர்களுக்கு பயிற்சிக்கு 1 லட்சம் கொடுப்பதும் முஸ்லிம் லீக்கின் திட்டமா? என்று கேள்வி எழுப்பினார். அனைவருக்கும் 25 உத்தரவாதம் கொடுத்துள்ளோம். இது ஏழைகளுக்கு, பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, தலித்துகளுக்கு அனைவருக்கும் வழங்கினோம் என கார்கே குறிப்பிட்டார்.

The post மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: