அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் 2,500 பேருக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு… விழா ஏற்பாடுகளுக்காக அறநிலையத்துறைக்கு பாராட்டு!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சிறப்பாக செய்திருந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மதுரை சித்திரை திருவிழாவில் போதுமான அளவிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திரை திருவிழாவிற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகை ஆற்றுக்குள் 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிடிக்க வேண்டும். பாரம்பரிய முறையில் தோற்பையில் கைகளால் உருவாக்கப்படும் விசையை பயன்படுத்தி நீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். ரசாயனம் கலந்த தண்ணீரையோ, பால், தயிர் கலந்த தண்ணீரையோ அடிக்கக்கூடாது. பிரஷர் பம்புகள் உள்ளிட்ட வேறு ஏதேனும் இயந்திரங்களை பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

 

The post அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் 2,500 பேருக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு… விழா ஏற்பாடுகளுக்காக அறநிலையத்துறைக்கு பாராட்டு! appeared first on Dinakaran.

Related Stories: