100 சதவீதம் வாக்களிக்க அமைக்கப்பட்ட பசுமை, பிங்க் வாக்குச்சாவடிகளில் ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்

காஞ்சிபுரம், ஏப்.20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் கண் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பசுமை, பிங்க் வாக்குச்சாவடி மையங்களை, வாக்காளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில், வாக்காளர்களும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழி பயன்பாடற்ற பசுமை சூழலுடன் கூடிய வகையில், பசுமை சுற்றுச்சூழல் நேய வாக்குச்சாவடிகள் 4 அமைக்கப்பட்டுள்ளன.

இதில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மானாம்பதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி, பெரும்புதூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி அய்யப்பன்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி, பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி காட்ரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி என 4 சுற்றுச்சூழல் நேய பசுமை வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

பசுமை வாக்குச்சாவடிகளில் பசுமையான தென்னை கீற்றுகளால் நிழல் தரும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வழி வெப்பக்கட்டுப்பாட்டுக்காக பசுமையான தழைகள், மூங்கில் தழைகளையும் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் சுற்றுச்சூழலை அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு மர வகைகள் பற்றிய புகைப்படங்களுடன் குறிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இயற்கையான சிறுதானியங்களாலும், காய்கறிகளாலும் வாக்களித்தல் சிறப்பு குறித்த கலையாக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாவிலை, வேப்பிலை தோரணங்கள் மற்றும் தென்னை ஓலை தோரணங்கள் ஆகியவை கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க அறிவுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மண்ணாலான குவளைகள் மற்றும் பாத்திரங்களை கொண்டு தண்ணீர் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுதவிர, வாக்குப்பதிவு அலுவலர்கள் பயன்படுத்தும் பொருட்கள் நெகிழி பயன்பாடற்று இருக்கும் வகையில், பனை ஓலை மற்றும் பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. மரங்கள் நிறைந்த, பசுமையுடன் உள்ள சூழல் வெப்பத்தாக்கத்தை குறைக்கும் என உணர்த்தும் வகையில் காண்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியான சூழல் உருவாக்கப்பட்டிருந்தன.

வாக்கு இயந்திரம் பழுது
காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 7 மணிக்கு தொடங்கியபோது, திடீரென வாக்குபதிவு இயந்திரம் பழுதானது. இதனால், 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. இதனால், காலையிலே தனது வாக்கு செலுத்த வந்த வாக்காளர்கள் சமார் 1 மணி நேரம் காத்திருந்தார். பின்னர், பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் உடனடியாக சரிசெய்யப்பட்டு 8 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

The post 100 சதவீதம் வாக்களிக்க அமைக்கப்பட்ட பசுமை, பிங்க் வாக்குச்சாவடிகளில் ஆர்வம் காட்டிய வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: