ஊழல் சாம்பியன் பிரதமர் மோடி பாஜ 150 சீட்களை தாண்டாது: ராகுல் காந்தி சவால்

காசியாபாத்: ‘தொழில் நிறுவனங்களை மிரட்டி, உலகின் மிகப்பெரிய பணம் பறிக்கும் திட்டம் தேர்தல் பத்திரம். அந்த ஊழலின் சாம்பியன் பிரதமர் மோடி. மக்களவை தேர்தலில் பாஜ 150 இடங்களைக் கூட தாண்டாது’’ என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: வரும் மக்களவை தேர்தல் இரு கருத்தியல்களுக்கான தேர்தல். ஒருபுறம், அரசியலமைப்பிற்கு, நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கும் முடிவு கட்ட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜ உள்ளன. மறுபுறம், அரசியலமைப்பையும், ஜனநாயக அமைப்புகளையும் பாதுகாக்கும் இந்தியா கூட்டணி.

இந்த தேர்தலில் பேசப்படுகின்ற மிக முக்கிய பிரச்னைகளாக வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை உள்ளன. ஆனால் அவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்புவதில் பாஜ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியோ சில சமயம், கடலுக்கு அடியில் செல்கிறார், சில சமயம் கடல் விமானத்தில் பறக்கிறார். ஆனால் பிரச்னைகள் பற்றி மட்டும் எங்குமே அவர் வாய் திறப்பதில்லை. மோடியின் சமீபத்திய நேர்காணல் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டது. அது ஒரு தோல்வி அடைந்த நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரம் குறித்து கூட மோடி விளக்கம் தந்துள்ளார்.

அவர் கூறியபடி, அரசியலை தூய்மைப்படுத்துவதற்காகவும் வெளிப்படைத்தன்மைக்காகவும்தான் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டது என்றால், அதை உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்தது? வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பாஜவுக்கு ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் ஏன் மறைக்கப்பட்டன? அந்த நிறுவனங்கள் பாஜவுக்கு நன்கொடை அளித்த தேதிகள் ஏன் மறைக்கப்பட்டன? நன்கொடை தந்த பிறகு ஒரு நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு அரசு ஒப்பந்தம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்திய 10-15 நாட்களுக்குப் பிறகு ஒரு நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் தான், உலகின் மிகப்பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டம். பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்தினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் மோடிதான் அந்த ஊழலின் சாம்பியன் என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்.

கடந்த 15-20 நாட்களுக்கு முன்பு கூட பாஜ 180 தொகுதிகள் வரை வெல்லும் என்ற சூழல் இருந்தது. இப்போது அது 150 இடங்களாக சுருங்கி விட்டது. இந்தியா கூட்டணிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை மிகவும் சக்தி வாய்ந்தது. எங்கள் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏழ்மையை ஒரே நேரத்தில் ஒழித்து விடுவோம் என யாரும் சொல்லவில்லை. ஆனால் அதற்காக நாம் பலமான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

* அமேதி தொகுதியில் போட்டியிடுவீர்களா?
ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் உபியின் அமேதியிலும், கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் அவர் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இம்முறையும் அவர் இரு தொகுதியிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வயநாட்டில் மட்டும் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காந்தி குடும்பத்தின் பாரம்பரியமான அமேதியில் இம்முறை போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ராகுல், ‘‘அமேதியில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும். கட்சியின் தேர்தல் குழு தான் முடிவுகளை எடுக்கிறது. கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன்’’ என்றார்.

* தேர்தல் பத்திரம், பிஎம் கேர் மோசடி குறித்து விசாரணை
கர்நாடகா மாநிலம் மண்டியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: தேர்தல் பத்திரம் முறைகேடு புகார் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி சில நாட்கள் மவுனமாக இருந்தபின், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்ப்பவர்கள், பிற்காலத்தில் வருத்தப்படுவார்கள் என்று கூறி இருப்பதின் மூலம் தேர்தல் பத்திரம் முறைகேடு புகாருக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துளளார். தேர்தல் பத்திரம் திட்டம் என்பது சட்டம் போட்டு பணம் பறிக்க கொண்டு வந்துள்ள மோசமான திட்டம் என்பது மட்டுமில்லாமல், இது தேசியளவில் மிக பெரிய ஊழலாக உள்ளது. ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தேர்தல் பத்திரம் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் முறைகள் மட்டுமில்லாமல், பி.எம்-கேர் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு புகார்களின் உண்மை நிலைமை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்று கொடுப்போம். இதை உத்தரவாதமாக மக்களுக்கு கொடுக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஊழல் சாம்பியன் பிரதமர் மோடி பாஜ 150 சீட்களை தாண்டாது: ராகுல் காந்தி சவால் appeared first on Dinakaran.

Related Stories: