ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை

 

ஈரோடு, ஏப்.17: ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும், தினந்தோறும் 100 மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை அருகேயுள்ள வரதநல்லூரில் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, அதிலிருந்து இயல்பு நீர் எடுக்கப்பட்டு, 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ண தரைமட்ட தொட்டியிலிருந்து 2,280 கிமீ குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வஉசி பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 42 லட்சம் மற்றும் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இவ்விரு தரைமட்ட தொட்டிகளிலிருந்து 79 கிமீ கிளை நீருந்து குழாய் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 மேல்நிலை தொட்டிகளுக்கும், 48 பழைய மேல்நிலை தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சியை சார்ந்த மக்களுக்கு நபர் ஒருவருக்கு தினசரி தலா 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தலைமை நீருந்து நிலையம் ஊராட்சிக்கோட்டை கதவணை மின் நிலையத்தின் மேற்புரம் அமைந்துள்ளது. தற்போது 6.05 மீ உயரம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய கொள்ளளவு 42 ஆயிரத்து 100 மில்லியன் கன அடியாகும்.

இதனால், ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க எந்த தட்டுபாடும் ஏற்பட வாய்ப்பு இல்லை. 2024ம் ஆண்டின் மக்கள் தொகையின் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 100 மில்லியன் லிட்டர் ஆகும். ஊராட்சிக்கோட்டை அருகேயுள்ள வரதநல்லூர் காவிரி ஆற்றில், ஈரோடு மாநகராட்சி தேவைக்கேற்ப குடிநீர் இருப்பு உள்ளதால், தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை appeared first on Dinakaran.

Related Stories: