ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா

 

ராமேஸ்வரம், ஏப்.15: ராமேஸ்வரம் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சித்திரை மாதம் முதல் நாள் குரோதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. பின் சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜையும் தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றது.

சித்திரை முதல் நாள் என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி அம்பாளை தரிசித்து சென்றனர். காலை 10.30 மணிக்கு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள் பாலித்தனர். தொடர்ந்து கடற்கரையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி முடிந்து பஞ்சமூர்த்திகள் நான்கு ரதவீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று ராமநாதசுவாமி கோயில் முதல் பிரகாரம் உற்சவர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் உதயக்குமார் ஜோசி பஞ்சாங்கத்தை வாசித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆண்டில் நடக்கவுள்ள காலக்கட்ட பஞ்சாங்க குறிப்பு பற்றி அறிந்தனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களான உஜ்ஜயினி மாகாளி கோயில், பத்ரகாளியம்மன் கோயில், நம்பு நாயகி அம்மன் கோயில், காந்தாரி அம்மன், திட்டகுடி துர்க்கையம்மன் கோயில், வர்த்தகன் தெரு விநாயகர், பால ஹனுமான் கோயில்களிலும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

The post ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: