சென்னையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ரூ.136 கோடியில் டிஜிட்டல் தகவல் பலகை: பேருந்துகள் வருகை, புறப்படும் நேரம், வழித்தடம் ஆகியவற்றை பயணிகள் அறிந்துகொள்ள ஏற்பாடு

அம்பத்தூர்: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் வசதிக்காக, டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதன் மூலம் மெட்ரோ நிலையம், விமான நிலையம் போல பேருந்து நிலையங்களிலும் நேரத்தை பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கியூஆர் கேடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறுவது, விருப்பம் போல் பயணிக்கும் பயண அட்டை, மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது.

அதுமட்டுமின்றி, உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள், பழைய பேருந்துகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கூடுதல் பயணிகளை கையாளும் விதத்திலும் இந்த பேருந்து நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன.

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இப்போதெல்லாம் பலவற்றில் தகவல் பலகைகள் இல்லை. சில இடங்களில் உள்ள தகவல் பலகைகளில் துல்லியமான நேரங்கள் இடம்பெறுவது இல்லை. குறிப்பாக, பேருந்து எப்போது வரும், எப்போது புறப்படும், பேருந்து எங்கெல்லாம் செல்லும், பேருந்துகளின் வழித்தடம் என்னென்ன என்பது தொடர்பான எந்த விவரங்களும் துல்லியமாக இருப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சென்னை பேருந்து நிலையங்களில் துல்லியமான தகவல் பலகைகள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மெட்ரோ நிலையம், விமான நிலையம் போல பேருந்து நிலையங்களிலும் நேரத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பணிமனைகளில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தகவல் பலகைகள் மூலம் எம்டிசி பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். அதாவது நேரலையாக பேருந்து எங்கே வந்துள்ளது, எப்போது நம்முடைய இடத்திற்கு வரும் என்று கணிக்க முடியும். துல்லியமாக இது வருகை மற்றும் புறப்படும் நேரத்தைக் காண்பிக்கும்.

இதுகுறித்து எம்டிசி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (ஜேஐசிஏ) நிதியுதவியுடன் சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பின் (சிஐடிஎஸ்) ஒரு பகுதியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சென்னை நகரத்தில் உள்ள 71 பேருந்து நிலையங்கள் மற்றும் 532 பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் தகவல் பலகைகள் அமைக்கப்படும். இதன்மூலம் பயணிகள் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாட்டை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

பேருந்துகளில் உள்ள ஜிபிஎஸ் மூலம் இந்த பணிகள் எளிதாக முடியும். ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னை பஸ் ஆப் என்ற செயலியை வெளியிட்டு உள்ளது. இதில் ஏற்கனவே பேருந்துகளை துல்லியமாக கணிக்கும் வசதி உள்ளது. இதை அப்படியே தகவல் பலகைகளில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். போன் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இந்த பலகைகள் பயன் உள்ளதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த பலகைகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.136 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக பலகைகளை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் இந்த பலகைகள் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது,’’ என்றனர்.

The post சென்னையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ரூ.136 கோடியில் டிஜிட்டல் தகவல் பலகை: பேருந்துகள் வருகை, புறப்படும் நேரம், வழித்தடம் ஆகியவற்றை பயணிகள் அறிந்துகொள்ள ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: