இந்தியா கூட்டணிக்கு பொதுவான செயல் திட்டம்: கார்கேவிடம் ஆம்ஆத்மி வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் ஆம் ஆத்மி எம்பி வலியுறுத்தினார். டெல்லி மதுபானக்கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.மக்களவை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்தை தீவிரப்படுத்துவதில் சஞ்சய் சிங் மும்முரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் சஞ்சய் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, பல விஷயங்கள் பேசினோம். பாஜ தலைமையிலான அரசு, ஒன்றிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைக்கப்படுவது பற்றியும் விவாதித்தோம்.

அதோடு, சிறையில் கெஜ்ரிவால் எப்படி நடத்தப்படுகிறார், அவருடைய உரிமைகள் எப்படி பறிக்கப்படுகின்றன என்பது குறித்தும் நான் அவரிடம் விளக்கினேன். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு என ஒரு பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன்’’ என்றார்.

The post இந்தியா கூட்டணிக்கு பொதுவான செயல் திட்டம்: கார்கேவிடம் ஆம்ஆத்மி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: