தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், டிஜிபியுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அனைத்து மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் நேற்று மாலை 4 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர்ஜிவால், போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஏடிஜிபி ரூபேஷ்குமார் மீனா, ஏடிஜிபி மகேஷ்குமார் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு இன்னும் 16 நாளே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று (2ம் தேதி) வரை சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான பணம், நகை, பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, வாக்குப்பதிவின்போது ஒப்புகை சீட்டை எப்படி எண்ணுவது, பிரசாரத்தின்போது மத உணர்வுகளை தூண்டியவர்கள் மற்றும் மற்றவர்களை பற்றி வெறுப்பாக பேசுபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, சி-விஜில் ஆப் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்துக்கு பணம் கொண்டு செல்வதை தடுக்க எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், டிஜிபியுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: