பாஜ-பாமக மிட்நைட் கூட்டணி: முத்தரசன் கிண்டல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்க வந்த அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். கச்சத்தீவை மீட்க இந்தியாவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகாலம் அமைதியாக இருந்துவிட்டு, இன்று பிரச்னைகளுக்கு பதிலளிக்க முடியாமல் கச்சத்தீவு பிரச்னையை கிளப்பி தப்பிக்க முயற்சிக்கிறார். திருவிழா கூட்டத்து திருடனை போல பாஜ செயல்படுகிறது.
மூன்றாவது முறையாக பாஜ வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் நாட்டில் தேர்தலே நடைபெறாது.

அரசியல் கட்சிகளே இருக்காது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குகிறது. பாமக கட்சியாக துவங்கும் போது, ராமதாஸ் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பாமக இன்று பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவேன் என கூறிய விபி சிங் கட்சியை பாஜ கவிழ்த்தது என்பதை நாடறியும். அப்படிப்பட்ட கட்சியோடு எந்த அடிப்படையில் அணி சேர்ந்தது என பதிலளிக்க வேண்டியது ராமதாசின் கடமை. இந்த கூட்டணி நள்ளிரவு கூட்டணியாகும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 3வது முறை மோடி பிரதமர் என்ற கனவு சரிந்து போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ-பாமக மிட்நைட் கூட்டணி: முத்தரசன் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: