ஏப்.15 வரை நீதிமன்ற காவல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நேற்று அவரது காவல் முடிந்ததும், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை காவலில் கெஜ்ரிவால் முற்றிலும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரை மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது.

இதை ஏற்று கெஜ்ரிவாலை ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கசிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ சோதனை முடிந்த பிறகு அவர் சிறை எண் 2ல் தனி அறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், முன்பு சிறை எண் 2ல் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் சிறை எண் 5க்கு மாற்றப்பட்டார்.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா சிறை எண் 1, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கே.கவிதா பெண்கள் சிறை எண் 6லிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு டெல்லி அமைச்சர்கள் அடிசி, சவுரவ்பரத்வாஜ் மற்றும் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர். அதே போல் திகார் சிறை வளாகத்திலும் ஏரளாமான ஆம்ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர்.

நீதிமன்றத்தில் நுழைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘பிரதமர் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல’என்று கூறினார். கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறுகையில்,’கெஜ்ரிவாலிடம் 11 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்?. அவர்களுக்கு (பாஜ) ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது. அது மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான். இந்த சர்வாதிகாரத்திற்கு நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்’ என்று அவர் கூறினார்.

* ஈடியின் அடுத்த குறி அமைச்சர்கள் அடிசி, சவுரவ் பரத்வாஜ்
டெல்லி கலால் கொள்கை வழக்கு விசாரணையில் நேற்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’ முதல்வர் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். மேலும் விசாரணை அமைப்பை அவர் தவறாக வழிநடத்தினார். இன்னும் அவரது பங்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. குற்றத்தின் மூலம் பெறப்பட்ட வருவாயையும் கண்டறிந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய விஜய் நாயருக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. அமைச்சர்கள் அடிசி மர்லினா மற்றும் சவுரவ் பரத்வாஜ் ஆகியோரிடம் பேசினார். மேலும் மதுபான விற்பனையில் தொடர்புடைய தினேஷ் அரோரா மற்றும் அபிஷேக் போயின்பல்லி போன்ற இடைத்தரகர்கள் தொடர்பான கேள்விக்கு, அவர்களை தெரியாது எனக் கூறி கெஜ்ரிவால் கேள்வியைத் தவிர்த்துவிட்டார்.

இந்த சதிகளின் இறுதி பலன் கோவா தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்ததே இதற்குக் காரணம். 45 கோடி ரூபாய் ஹவாலா பணப்பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் கெஜ்ரிவாலிடம் காட்டப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விஜய் நாயர் வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, கெஜ்ரிவாலுக்கும் தனக்கும் நேரடி தொடர்பு இல்லை. அமைச்சர்கள் அடிசி, சவுரவ் பரத்வாஜிடம் தான் பேசுவேன் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த தகவலை கெஜ்ரிவால் தற்போதுதான் வெளியிட்டிருப்பது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள ஆம்ஆத்மி கட்சியினர் அமலாக்கத்துறையின் அடுத்த குறி அமைச்சர்கள் அடிசி மற்றும் சவுரவ் பரத்வாஜ் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

* சிறப்பு நீதிபதியிடம் தெரிவிக்க உத்தரவு
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்த போது முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி 2 உத்தரவுகளை பிறப்பித்தார். இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுர்ஜித்சிங் யாதவ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை காவலில் இருக்கும் போது முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்த விவகாரம் குறித்து சிறப்பு நீதிபதியிடம் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கலாம் என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.

The post ஏப்.15 வரை நீதிமன்ற காவல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Related Stories: