ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கு மே.வங்க அமைச்சர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல்

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன மோசடி விவகாரத்தில் மேற்குவங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஆசிரியர் நியமனத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதன்ஒரு பகுதியாக மேற்குவங்க சிறு,குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவின் பிர்பூர் மாவட்டம் போல்பூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை நடைபெற்றபோது அமைச்சர் அங்கு இல்லை. 14 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில், அவரது வீட்டில் இருந்து ஒரு செல்போன், ரூ.40 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

* இன்னொரு அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு
மேற்குவங்க மின்சாரம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாசின் சகோதரர் ஸ்வரூப் பிஸ்வாசின் வீட்டில் வருமான வரித்துறை கடந்த 20ம் தேதி காலை முதல் சோதனை நடத்தியது. ஸ்வரூப் பிஸ்வாஸ் நடத்தி வரும் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஸ்வரூப் பிஸ்வாசுக்கு சொந்தமாக கொல்கத்தாவில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த 70 மணி நேர சோதனை நேற்று காலை முடிவுக்கு வந்தது.

The post ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கு மே.வங்க அமைச்சர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: