இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை

டெல்லி: நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் வீடுகளில் சைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத ஒப்பீட்டின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதம் அசைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு ரூ.56.3 என இருந்துள்ளது. கடந்த நான்கு மாத காலத்தில் இது அதிகபட்சம் என தெரிவித்துள்ளது. கிரிஸில் வெளியிட்டுள்ள ‘ரொட்டி ரைஸ் ரேட்’ என்ற ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடந்த மாதம் கணிசமாக ஏற்றத்தை கண்டுள்ளது. அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்களின் விலையும் அதிகரித்து இருந்தது. பணவீக்கம் மற்றும் பயிர் வரத்து குறைவு முதலியவை இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வெங்காய சாகுபடி ரபி பருவத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை கண்டதும், மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு பயிர் சாகுபடி சேதம் போன்றவை இந்த விலை உயர்வில் முக்கிய பங்காற்றி உள்ளது. அதே நேரத்தில் சீரகம், மிளகாய் மற்றும் வெஜிடபிள் ஆயில் போன்றவற்றின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவை கண்டது. அதனால் சைவ சாப்பாட்டுக்கான விலை ஏற்றத்தின் விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் அசைவ சாப்பாட்டின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் குறைந்துள்ளது. கறிக்கோழியின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளது இதற்கு காரணம். இருப்பினும் கடந்த மார்ச் மாதத்தில் அசைவ சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு ரூ.54.9 என இருந்தது. இது ஏப்ரலில் 3 சதவீதம் என உயர்ந்துள்ளது என இந்த அறிக்கையில் கிரிஸில் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: