டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்

புதுடெல்லி: இரண்டாம் கட்ட பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். இதில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, கலை, சமூக பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட 5 பேருக்கு பத்ம விபூஷண், மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உட்பட 17 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 110 பேருக்கு பத்ம ஸ்ரீ என 132 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டன.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெங்கையா நாயுடு, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பாதிக்கும் மேற்பட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், எஞ்சியவர்களுக்கு 2ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விருதுகளை ஜனாதிபதி முர்மு வழங்கினார். இதில், கலைத்துறையில் சிறந்த சேவை செய்ததற்காக நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார்.

பழம்பெரும் நடிகையான தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி ஆகியோர் பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாச்சியார், கிராமிய நாட்டுப்புற கலைஞர் பத்திரப்பன், ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளைச் சேர்ந்த பெண் விவசாயி கே.செல்லம்மாளுக்கு பத்ம  விருதுகள் வழங்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியான மறைந்த பாத்திமா பீவிக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

The post டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார் appeared first on Dinakaran.

Related Stories: