கடினமான பாதையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு என் கவிதை வரிகள் வழிகாட்டும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் கடந்து வந்த கரடு முரடான பாதைகள்தான் என்னை ஒரு நல்ல இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது’’ என்கிறார் இலங்கையைச் சேர்ந்த வசந்த குமாரி. மாடலிங் துறையில் பணியாற்றி வரும் இவர் தற்போது தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எல்லாம் கவிதைகளாக மாற்றி சமீபத்தில் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினை புத்தகமாக வௌியிட்டுள்ளார்.

‘தவங்களெல்லாம் வரங்களாவதில்லை’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அவரின் கவிதைத்தொகுப்புகளுக்கு பின் அவர் சந்தித்த அனுபவங்களைப் பற்றி மனம் திறந்தார் வசந்தகுமாரி. ‘‘நான் இலங்கையில் உள்ள லூனாவை பகுதியில் வசித்து வருகிறேன். எங்களுடைய குடும்பம் ஏழ்மையான குடும்பம். நாங்க தேயிலைத் தோட்டம் உள்ள பகுதியில்தான் வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்கள் தேயிலைத் தோட்டத்தில்தான் கூலி வேலை பார்ப்பார்கள். ஆனால் அதில் வேலை பார்க்கும் எங்களுக்கு கூலி மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும். அதனால் பலரின் வாழ்க்கை வறுமையில்தான் அங்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. என் பெற்றோரும் அங்குதான் கூலி வேலை பார்த்து வந்தார்கள். அதனால் நானும் அந்த வறுமையான சூழலில்தான் வளர்ந்தேன்.

அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் பள்ளிக்கு அணிந்து செல்ல ஒரு சீருடைதான் இருக்கும். அந்த ஒரு துணியைதான் தினமும் அணிந்து செல்வேன். அன்று பள்ளிக்கூடம் முடித்து வந்ததும், போட்டிருந்த உடையை துவைத்து போட்டுவிடுவேன். திரும்பவும் மறுநாள் காலையில் துவைத்து போட்டிருந்த அந்த உடையைதான் போட்டுச் செல்வேன். நான் வசிக்கும் பகுதியிலிருந்து எங்களுடைய பள்ளிக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகும்.

அத்தனை தூரமும் நடந்துதான் போக வேண்டும். சிறு வயதிலிருந்தே எனக்கு வரையவும், கவிதை எழுதவும் பிடிக்கும். அதனால் சின்னச் சின்ன அளவில் ஓவியங்கள் வரைவேன். வரைவதில் எவ்வளவு ஆர்வமோ அதேபோல் எனக்கு என்னை அலங்காரப்படுத்திக் கொள்ளவும் பிடிக்கும். அதனால் பலவிதமான உடைகளை உடுத்தி என்னை அழகுப்படுத்தி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் பள்ளிக்கூட உடையே துவைத்து போட்டுக் கொள்ளும் நிலையில் இருக்கும் போது, மற்ற உடைகளும் அதே நிலையில்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, என்னிடம் இருக்கும் உடைகளில் எனக்கு பிடித்த உடைகளை நான் போட்டு நானே என்னை அலங்கரித்துக் கொள்வேன். உங்களை நீங்கள் அழகுப்படுத்தி பார்க்கும் போது, உங்களுக்கே உங்கள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். அதுதான் உங்களின் கனவுகளை நோக்கி ஓட வைக்கும்’’ என்றவர் மாடலிங் துறைக்குள் தன்னை இணைத்துக் கொண்டது குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னுடைய ஏழ்மைக்கு நான் தீர்வு காண வேண்டும் என்றால் அதற்கு கல்வி அவசியம் என்று புரிந்துகொண்டேன். அதனால் நன்றாக படித்தேன். பள்ளிப்படிப்பு முடிச்சதும், செவிலியருக்கு படிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு, அந்த பயிற்சியில் சேர்ந்து படிச்சேன். செவிலியராக வேலைக்கும் சேர்ந்தேன். சில காலம் அதில் வேலை செய்தேன். நான் வாங்கிய சம்பளத்தில் குடும்பத்திற்கு போக எனக்காக நான் செலவு செய்வது என்றால், புதுப்புது உடைகள் வாங்குவதாகத் தான் இருக்கும். எனக்குப் பிடிச்ச உடைகளை வாங்கி உடுத்தி பார்ப்பேன். ஏற்கனவே எனக்கு மாடலிங் துறை மேல் ஒரு ஈடுபாடு இருந்ததால், அதில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினேன்.

நான் வீட்டில் மாடலிங் துறைக்குள் செல்ல இருப்பதாக சொன்னதும், பலரும் அதை இழிவாக பேசினார்கள். மாடலிங் துறை என்றாலே இன்றும் நம்முடைய சமூகத்தில் அதன் மேல் தவறான கண்ணோட்டம்தான் இருந்து வருகிறது. உடல் சார்ந்த புரிதல் இல்லாததால், பலரும் அந்த துறையினை தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கின்றனர். அதை நானுமே எதிர்கொண்டேன். நான் மாடலிங் செய்ய ஆரம்பித்ததும், என்னைப் பற்றி தவறாக பேசினார்கள். என்னைப் பொறுத்தவரை மற்ற வேலைகள் போல் அதுவும் ஒரு வேலைதான். அதனால் நான் எனக்கு பிடித்த அந்த துறையில் எனக்கான ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஆரம்பத்தில் எனக்கு சின்னச் சின்னதாக விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. எனக்கு கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என்னுடைய அந்த ஆர்வம்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்தது. விளம்பர படங்களைத் தொடர்ந்து போட்டோ ஷூட்கள் எடுத்தேன். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. சிறு வேடங்கள் என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொண்டேன்’’ என்றவர், கவிதைத் தொகுப்பு புத்தகம் வெளியிட்டது குறித்து விவரித்தார்.

‘‘மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தாலும், எனக்கு நேரம் கிடைக்கும் போது கவிதைகள் எழுதப் பிடிக்கும். அப்படி நான் எழுதிய எல்லா கவிதைகளையும் என் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன். என் கவிதைகளை படித்த நண்பர் ஒருவர், கவிதைகள் எல்லாம் நன்றாக உள்ளது, அதை ஏன் ஒரு புத்தகமாக வெளியிடக்கூடாதுன்னு கேட்டார். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அந்த எண்ணமே தோன்றியது. நான் அதுவரை எழுதியிருந்த கவிதைகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். நான் எழுதிய கவிதைகள் எல்லாமே நான் கடந்து வந்த கடினமான நேரங்கள் மற்றும் பாதைகளை பிரதிபலிக்கக்கூடியவை.

என்னைப்போல் கரடு முரடான பாதைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த கவிதை வரிகள் ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நினைத்தேன். அதனால்தான் அதனை ெதாகுத்து ‘தவங்களெல்லாம் வரங்களாவதில்லை’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டேன். மேலும் நான் பள்ளியில் படிக்கும் ேபாது வீட்டின் வறுமை காரணமாக நோட்டுப் புத்தகங்கள் வாங்க காசு இருக்காது. அப்போது என் மனதில் தோன்றிய விஷயம் ஒன்றுதான்.

நான் நல்ல நிலைமைக்கு வந்தபிறகு இதுபோல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பது தான். என்னுடைய கவிதைத் தொகுப்பினை வெளியிட்ட போது, எங்க கிராமத்தின் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். மேலும் நான் மாடலிங் துறையில் நல்ல நிலையில் முன்னேற வேண்டும். என் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும்’’ என தன்னம்பிக்கையோடு சொல்கிறார் வசந்தகுமாரி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கடினமான பாதையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு என் கவிதை வரிகள் வழிகாட்டும்! appeared first on Dinakaran.

Related Stories: