சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கிறிஸ்தவ முறைத் திருமணங்களில் மணமகளும் மணமகனும் தேவாலயத்தின் நுழைவு வாயிலில் என்ட்ரி கொடுக்கும் காட்சி பார்க்கவே பரவசம்தான். அத்தனை நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும் பார்க்க.மணமகனின் கரம் பற்றி வெள்ளை உடை தறித்த தேவதையாக மணமகள் மெல்ல நடந்துவர… அவரின் தலையில் இருந்து பின் பக்கமாகத் தரையில் புரளும் நெட்டின் நுனி பிடித்து உடன் வருகிற தோழிகள்(bride maids) ஒரே வண்ண ஃப்ராக்ஸ் அணிந்து உடன் வர… பிரில்லி பிரில்லியான லேஸ் உள்ள கவுன் அணிந்த ஃபிளவர் கேர்ள்ஸ் என்கிற குட்டித்தேவதைகள் மணமக்கள் முன் பூக்கூடைகளுடன் மிக அழகாய் நடந்து வருவர்.

கிறிஸ்தவ மணப் பெண்ணுக்கான வொயிட் ஃப்ராக்கில் தொடங்கி… ஹேண்ட் கிளவுஸ், தலையில் அணியும் நீளமான நெட்(veil) மணப்பெண்ணின் உச்சந்தலையில் பளிச்சிடும் வெள்ளை கிரீடம், கால்களை அலங்கரிக்கும் வெள்ளை காலணி, கரத்தை அலங்கரிக்கும் அழகிய பொக்கே, உடன் வரும் ஃப்ளவர் கேர்ள்ஸ், கரத்தில் தவழும் பூக்கூடைகள் என அத்தனையையும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து, இருபது ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வெற்றிகரமாக தொழில் செய்கிறார் லதா ஸ்ரீதர். அவரிடம் பேசியதில்…

‘‘என் பெயர் மேரி ஆன் லதா. சுருக்கமாக லதா. நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னைதான். என்றாலும், என் அம்மா ஸ்ரீலங்கன். அப்பா மட்டுமே சென்னை. என்னைத் திருமணம் செய்து கொடுத்த ஊர் தூத்துக்குடி. எங்களுக்கு மகள் பிறந்த நிலையில் கணவர் செய்து வந்த தொழிலில் சற்றே தொய்வு ஏற்பட குடும்பமாக சென்னைக்கு மாறினோம்.

மகள் உடுத்தும் ஃப்ராக்ஸ் அனைத்தும் ஸ்ரீலங்காவில் இருந்து வரும். அவை செம லுக்கில் பிரில்லி பிரில்லியாக, ரிச் மெட்டீரியலில் கண்ணைக் கவரும். மகள் அணியும் கவுன்களைப் பார்க்கும் நண்பர்கள் பலரும் தங்களின் குழந்தைக்கும் இதே மாதிரியான கவுன் வேண்டுமென தொடர்ந்து கேட்க ஆரம்பித்தனர். இப்படியாக மகள் வழியே தொடங்கியதே பெண்களுக்கான என்னுடைய “வெஸ்டர்ன் அவுட்பிட் ஃப்ராக்ஸ்” பிஸினஸ்’’ என புன்னகைத்தபடியே ஃப்ராக் தொழிலில் வெற்றிப்படிகளில் தான் ஏறிய கதையை விவரிக்க ஆரம்பித்தார் லதா ஸ்ரீதர்.

‘‘ஜீரோ சைஸில் தொடங்கி 10 வயதுவரை உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே, 2000ம் ஆண்டில் ஃப்ராக் ஷாப் ஒன்றை சிறிய அளவில் தொடங்கினேன். அப்போது பெண் குழந்தைகளுக்கான ஃப்ராக்ஸ்களை ஸ்ரீலங்காவில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தோம். இதில் பெரிய அளவில் லாபம் இல்லை. தொழிலை ஆரம்பித்த முதல் 10 ஆண்டும் மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது. காரணம், பெண் குழந்தைகளுக்கு மட்டுமே எனத் தொடங்கியதில் பெரிய ரீச் இல்லை எனலாம். இந்த நிலையில்தான் ப்ரைடல் ஃப்ராக்ஸ்(bridal frock) தேடி பலர் என் கடைக்கு வர ஆரம்பித்தனர்.

2015ம் ஆண்டுவரைகூட கிறிஸ்தவ மணப்பெண்களுக்கான ஃப்ராக்ஸ் கடைகள் சென்னையில் பெரிய அளவில் இல்லை. இதை வாடிக்கையாளர்கள் வழியாகத் தெரிந்துகொண்டு, ப்ரைடல்வேர் கவுன்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இதற்கென வெப்சைட் ஒன்றையும் முதலில் உருவாக்கி விற்பனை செய்யத் தொடங்கியதில் ரீச் நன்றாக இருந்தது. அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக என் தொழில் வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்தது.புதுநன்மை (holy communion), ஞானஸ்நானம்(baptism) நிகழ்ச்சிகளுக்கு பெண் குழந்தைகள் உடுத்துகிற வெள்ளை கவுன் மற்றும் திருமணத்தில் ஃப்ளவர் கேர்ள்ஸ் அணியும் ஃப்ராக்ஸ் இவைகளை மட்டுமே ஸ்ரீலங்காவில் இருந்து கொண்டு வருகிறோம்.

மற்றபடி நாங்கள் விற்பனை செய்யும் ப்ரைடல் ஃப்ராக்ஸ் முழுக்க முழுக்க வெஸ்டர்ன் அவுட்புட். சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு என் கணவரோடு நேரில் பயணித்து குறைந்தது 20 நாட்கள் அங்கேயே தங்கி தேவையானதை தேர்ந்தெடுத்து ஃபுல் கண்டெய்னராக லோட் செய்து கொண்டு வருகிறோம். எங்களிடம் ஹாஃப் வொயிட், கோல்டு மற்றும் ஷாம்பைன் வண்ணங்களில் கிறிஸ்டியன் ப்ரைடல்வேர், பார்ட்டி வேர், ஈவ்னிங் கவுன்கள் வெரைட்டியாய் கிடைக்கும். ஃப்ராக்கிலும் லேஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

இன்று கிறிஸ்தவ முறைத் திருமணங்களைத் தாண்டி இந்து முறைத் திருமணங்களிலும் நீண்ட கவுன்களை பல வண்ணங்களில் விரும்பி தேர்ந்தெடுத்து அணிவதால் அவற்றையும் வெஸ்டர்ன் அவுட்புட்டில் கொண்டு வருகிறோம். எங்களின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான லுக்கை வாடிக்கையாளர்களுக்கு பெஸ்டாக வழங்குவதே’’ என அழுத்தமாகப் பதிவு செய்தவர், ‘‘ப்ரைடல்வேர் ஃப்ராக்ஸ் இன்பில்டாகவே இருக்கும் என்பதால் பிரேஷியர் அணியும் அவசியமும் மணப்பெண்களுக்கு இருக்காது.

ப்ரைடல் ஃப்ராக்ஸ் விற்பனையை தொடங்கியதில் இருந்தே வெளிநாடுகளுக்கு பயணித்து, நேரில் சென்று தேர்வு செய்து கொண்டுவருவதாகத் தெரிவித்தவர், தொழில்முறை பயணமாக இதுவரை 10 முறைக்கு மேல் சீனா மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு சென்று வந்திருக்கிறேன்’’ என்றவர், தன் அனுபவத்தை மேலும் நம்மிடம் விவரித்தவர். பல்வேறு நாடுகளுக்கு பயணித்த தனது அனுபவத்தில், மேட் இன் சீனாதான் எல்லாவற்றிலும் பெஸ்ட் என்கிறார் மெட்டீரியல்களை தேர்வு செய்யும் முதிர்ச்சியோடு.

‘‘எங்களிடம் எல்லா வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்துகிற மாதிரியாக, 9ஆயிரத்தில் தொடங்கி ரிச் பிரிவினருக்காக அதிகபட்சம் 1 லட்சம் வரை ஃப்ராக்ஸ் வெரைட்டிகள் உண்டு. கஸ்டமைஸ்ட் செய்வதற்கான மெட்டீரியலும் கிடைக்கும். மணப்பெண்கள் ரெடிமேட் அவுட்புட்டில் கவுன்களை எடுப்பதே எப்போதும் பெஸ்ட். ஏனெனில் இதன் லுக் எப்படி இருக்கும் என்பதை உடனடியாய் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஸ்டிச்சிங் செலவு இருக்காது’’ என்கிறார் 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கும் அனுபவத்தில்.

‘‘அதேபோல் மணப் பெண் கரங்களில் தவழும் வொயிட் பொக்கே மட்டுமே ரெடி டூ யூஸாக சீனாவில் இருந்து வருகிறது. மற்றபடி கலர் பொக்கேஸ் அனைத்தும் கஷ்டமைஸ்ட். இதற்கான மெட்டீரியல்ஸ் ஹாங்காங் நாட்டில் இருந்து கொண்டு வருகிறோம். காரணம், தாய்லாந்து நாட்டின் கைவினைப் பொருட்கள் பார்க்க வேற லெவலில் இருக்கும்’’ என்கிறார் லதா.

‘‘எனக்கு எல்லா நாடுகளிலும் உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதால், வெளிநாட்டில் நடக்கும் கிறிஸ்தவ திருமணங்களில் இன்றைக்கு என்ன டிரென்ட் என்பதை புகைப்படம் வழியே அப்டேட் செய்துவிடுவார்கள். நான் அவற்றை எனது தொழிலில் அப்டேட் செய்து கொண்டே இருக்கிறேன். காரணம், கிறிஸ்தவ திருமணங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெளிநாட்டவரை பின்பற்றுவார்கள்.

குழந்தையாக இருந்தபோது நான் ஃப்ராக் வாங்கிக் கொடுத்த குழந்தை, இன்று தனக்குத் திருமணம் என வெட்டிங் ஃப்ராக் கேட்டு என்னைத் தேடி வந்து நிற்கிறது. தனது திருமணத்தில் குவாலிட்டியும், வெரைட்டியும் வேண்டும் என நினைப்பவர்கள் என்னைத்தேடி கண்டிப்பாக வருவார்கள். இதுதான் என் தொழிலில் உள்ள வெற்றி’’ என புன்னகைத்து விடைகொடுத்தார் மேரி ஆன் லதா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: