இந்திய சினிமாவில் அதிரடியாக புகுத்தப்பட்ட இந்துத்துவா: ஒருபுறம் இந்துத்துவ கருத்துகள்: மறுபுறம் இஸ்லாமிய வெறுப்பு: சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு


2019ஆண்டு இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆகிறார். சரியாக 6 மாதங்கள் கழித்து அவர் பாலிவுட் பிரபலங்களை சந்திக்கிறார். இதில் நடிகர், நடிகைகள் மட்டும் அல்ல. இந்திப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள், வினியோகஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர். இந்த சந்திப்பு, இந்திய சினிமாவை உலக அளவில் வியாபாரத்தை பரந்து விரிய வைத்து, இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. ஆர்எஸ்எஸ்ஸின் ஒரே கொள்கையான இந்துத்துவா கொள்கையையும் முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தையும் சினிமா மூலம் புகுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட பகிரங்க சந்திப்பு. இந்த சந்திப்பில் பங்கேற்ற பாஜ கொள்கைகளுக்கு எதிரான ஒரு சினிமா கலைஞர்தான் இந்த சந்திப்பின் பின்னணியை போட்டு உடைத்தார்.

அவர் சொன்னதுபோலவே இந்த சந்திப்புக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில் வெளியான இந்திய படங்களில் 50 சதவீத படங்கள், இந்துத்துவ கொள்கைகளையும் முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தையும் முன்னிறுத்தி வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் சினிமா ரசிகர்களை மூளைச் சலவை செய்யும் யுக்தியில் வெற்றி பெற்று வருவதாக பாஜ புளகாங்கிதம் அடைந்து வருகிறது. உலகிலேயே இரண்டாவது அதிக இஸ்லாமியர்கள் கொண்ட நாடான இந்தியாவில் இப்படியான ஒரு மதம் மீதான வெறுப்பையும், மதத்தினர் மீதான காழ்ப்பு உணர்வுகளையும் சினிமா சித்தரிப்பது வேதனையான சம்பவம்தான். கிட்டத்தட்ட 50க்கும் மேலான படங்கள் அதில் பல படங்கள் மெகா ஹிட் என்பது பதற வைக்கும் உண்மை.

‘ பீட்’ – மார்ச் 2023ல் இந்தப் படத்திற்கான டிரெய்லர் வந்ததுதான் தாமதம், ஓரிரு நாட்களில் டிரெய்லர் நீக்கப்பட்டு வேறு விதமாக எடிட் செய்யப்பட்ட டிரெய்லர் வெளியானது. காரணம் முதலில் வெளியான டிரெய்லரில், பிரதமர் மோடி இன்றிலிருந்து கொரோனா காரணமாக ஊரடங்கு என அறிவிப்பதும், அதைத் தொடர்ந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மேல் காவல் துறையினர் நடத்தும் தாக்குதலுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அடுத்து வந்த டிரெய்லரில் வெளியேறும் மக்கள், மற்றும் சில இடங்களில் உதவும் காவல் துறையினர் என்பது போல் காட்சிகள் இடம்பெற்றன. மேலும் படம் வெளியான போதும் 13 கட், காட்சிகள் மாற்றியமைப்பு என படத்தை காலி செய்தது அதிகாரத்துவம்.

நல்லவேளையாக இந்த சூட்சமம் எல்லாம் பெரிதாக தெரியாத நிலையில் உண்மையில் மக்களுக்கு உண்மையை காட்டி, பாஜவின் தோலுரித்த ‘ஆர்டிக்கிள் 15’, ‘முல்க்’, ‘முக்காபாஸ்’ போன்ற படங்கள் முன்பே வந்துவிட்டன. இல்லையேல் நிச்சயம் கத்தரிப்புகளையும், தடைகளையும் இப்படங்கள் சந்தித்திருக்கலாம். அதேபோல் பிருத்விராஜின் ஜனகண மன படம் கேரளாவில் வந்ததால் தப்பித்தது.
கடந்த ஆண்டு வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பாஜவின் கொள்கை பரப்பு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ‘லவ் – ஜிகாத்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு 50,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு, தீவிரவாதத்துக்கும், பாலியல் இச்சைக்கும் ஆட்படுத்துவதாகக் காட்டப்பட்டது. 50,000 பெண்களை காதலித்து ஏமாற்றுவதெல்லாம் அவ்வளவு சுலபமா என்ன?
பாதி உண்மைகள் இதில் மறைக்கப்பட்டன. இன்னும் ஏராளமான வரலாறுகள், கதைகள், புனைவாக்கப்பட்டு வருகின்றன. ஏன் உண்மையான இந்து மத வரலாறுகளே கூட மாற்றப்பட்டு விடுமோ என்கிற அச்சம்தான் உண்டாகிறது.

சர்தார் வல்லபாய்க்கு சிலை திறந்ததிலிருந்து இந்த பாஜ கட்சி சார்ந்த தலைவர்களை வலிமையாக மக்கள் மனதுள் புகுத்தும் வேலையை மோடி அரசு மிக கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது.
இதோ… பாகிஸ்தான் இஸ்லாமியர்களால் ஐதராபாத் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளானது, என்னென்ன கொடுமைகளை மக்கள் அனுபவித்தனர் எனக் காட்டும் படமாக வெளியாகவுள்ளது பாபி சிம்ஹாவின் ‘ரஸாக்கர்’ திரைப்படம். இதே கதையை மையமாகக் கொண்டு 2014ம் வருடமே ஒரு தெலுங்கு படம் ‘ரஸாக்கர்’ என்னும் அதே பெயரில் ஏற்கனவே அதே கதையுடன் வெளியானது இருக்கும்போது எதற்கு மீண்டும் வேறு நடிகர்களுடன் நினைவூட்டல்..?

இந்த மாதத்தில் வெளியாகியுள்ள ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கர்’ படத்தை எடுத்துக் கொள்வோம். இப்படத்தின் டிரெய்லர் விடுதலைப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்கரின் வரலாற்றுக் கதை என அறிவிக்கிறது. இவர்தான் இந்து தேசியவாதத்தை சீரமைத்து, அரசியல் கொள்கைகளாக மாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்து மகாசபாவை உருவாக்கியவரும் இவரேதான். இந்து மகாசபாவில் இருந்துகொண்டு இந்துத்துவா என்னும் முறையை பிரபலப்படுத்தி இந்தியாவின் அடையாளம் இந்து மதம் என ஆவணப்படுத்தியவர்.

இவர் சுதந்திர போராட்டத்தில் எதுவும் பங்கேற்கவில்லை. ஆனால் சுதந்திர போராட்ட வீரர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டபோது, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு, விடுதலை ஆனவர். இவரையெல்லாம் வீரர் என அடைமொழி கொடுத்து சினிமா மூலம் மக்களிடம் சென்று சேர்க்க விரும்புகிறது ஒன்றிய அரசு. சினிமாவையும் சமூகத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. ஒன்றின் தாக்கம் மற்றொன்றில் எதிரொலிக்கும். அப்படிப்பட்ட சினிமா என்னும் சக்திவாய்ந்த ஆயுதம் மூலம் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் புகுத்திக் கொண்டே இருந்தால் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் என்கிற அடிப்படையில் நிச்சயம் நம்மையும் மீறிய சார்புநிலையை இப்பிரசாரப் படங்கள் ஏற்படுத்தவே செய்யும். காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற விஷமத்தனமான படம் வந்தபோது, அதுதான் நடந்தது.

காஷ்மீர் பண்டிதர்கள் தீவிரவாதிகளால் இன்னலுக்கு ஆளானது உண்மைதான். ஆனால் அதை மட்டும் காட்டினால் இந்திய முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு வன்மம் பிறக்காது என்பதற்காக வேண்டுமென்றே உண்மையை திரித்து, காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பண்டிதர்களை கொன்றனர், பெண்களை பலாத்காரம் செய்தனர், நகரை விட்டு விரட்டினர் என்ற பச்சைப் பொய்யை உண்மையை போல காட்டினார்கள். இப்படியொரு படத்துக்கு அரசியல் வரலாற்றிலேயே நடக்காத ஒரு விஷயமும் நடந்தது. அதாவது, இந்த படத்தை பிரதமர் மோடி பாராட்டி பேசியதுடன் நிற்காமல், ‘ஜமாத்தார்கள் (முஸ்லிம்கள்) இந்தப் படத்தை பற்றி அறிந்து நடுங்கிப் போயிருக்கிறார்கள்’ என்றும் பேசினார். மதச்சார்பற்ற ஒரு நாட்டின் பிரதமர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் ஒதுக்கித் தள்ளி அவர்களை கீழ்த்தரமாக தரம் தாழ்த்தி பேசியதற்கு சமூக வல்லுநர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த படம் தியேட்டர்களில் ஓடும் சமயத்தில் நடந்த விஷயங்களும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையே நிலை குலைய வைத்தது. படம் முடிந்தும் தியேட்டர்களில் சில கும்பல்கள் ஜெய் ராம் என கோஷமிட்டதும் மட்டுமின்றி, முஸ்லிம்களுக்கு எதிராக இழிசொற்களை பயன்படுத்திய வீடியோக்களும் அப்போது வைரலானது.

இதன் அடிப்படையிலேயே தடாலடியாக ஒரே சமயத்தில் கொடுத்தால் நிச்சயம் மக்கள் விழித்துக் கொள்வார்கள், கேள்வி கேட்பார்கள் அல்லது உலக நாடுகள் விழித்துவிடும் என்பதால் கடந்த ஐந்து வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டு இந்து அரசர்களின் வீர தீர கதைகள், அதனூடே இஸ்லாமிய மன்னர்களின் அடக்குமுறை அல்லது பாலியல் வன்கொடுமைகள் சித்தரிப்பு, இந்து மதக் கொள்கைகளை மழைச்சாரல் போல் தூவுவது என அரங்கேற்றி வந்தார்கள்.

இறுதியாக இதோ முழுதாக சந்திரமுகி வேஷம் வெளிப்பட்டது போல் ‘ஆதிபுருஷ்’, ‘ராம் சேது’, ‘ஹனுமன்’, ‘ஆர்டிகள் 370’, ‘வாஜ்பாயி’ என படங்கள் சமீபமாக திரையரங்குகளை நிரப்புகின்றன.
இதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நமக்கே தெரியாமல் நம் சினிமாட்டிக் யுனிவர்சில் கடந்த காலத்தில் கலந்துவிட்ட சில இந்துத்துவா படங்கள், ‘எ வெட்னஸ்டே’, ‘பத்மாவத்’, ‘ஆர் ஆர் ஆர்’, ‘தன்ஹாஜி’, ‘சாம்ராட் பிரித்விராஜ்’, ‘பானிபட்’, ‘மனிகர்னிகா’ என சொல்லிக் கொண்டே போகலாம்.

அயோத்தியில் ராமர் கோயில் திறந்தமைக்கு எப்படி எல்லாம் கதை சொல்ல முடியுமோ, எப்படி எல்லாம் நியாயம் கற்பிக்க முடியுமோ அதையெல்லாம் செய்கிறது இந்த பிஜேபி சினிமாட்டிக் யுனிவர்ஸ்.
இது போதாதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் சரி எனக் காட்ட ‘வாஜ்பாய்’, ‘நரேந்திர மோடி’, ‘ஆர்டிக்கிள் 370’, ‘ஃபைட்டர்’ போன்ற படங்கள். அடுத்த பிஜேபி சினிமாட்டிக் விங்களின் வேலை இஸ்லாமியர்கள் நமக்கு ஆற்றியக் கொடுமைகள், அதனால் அனுபவித்த இன்னல்கள் மற்றும் கதைகளை பொய்யாக உருவாக்குவது எனக் கொண்டால் ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘இந்துத்துவா’, ‘த கேரளா ஸ்டோரி’, ‘72 ஹூரெய்ன்’ என நீளும் பட்டியலைக் குறிப்பிடலாம்.

புல்வாமா தாக்குதலை மையமாக வைத்தே கமர்ஷியல் கொத்து பரோட்டாவான ‘ஃபைட்டர்’ முதல் ‘ஆர்டிகள் 370’ வரை திரையரங்கை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?
‘ரோஜா’, ‘துப்பாக்கி’, ‘எப்ஐஆர்’, தெலுங்கில் ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’, ‘ஆதிபுருஷ்’, ‘ரஸாக்கர்’ என தென்னிந்தியாவையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. வலதுசாரி ஆதரவாளரான ஒரு தமிழ் எழுத்தாளரின் சினிமா பிரவேசத்துக்கு பின்பே தமிழ் படங்களிலும் நஞ்சு கருத்துகள் விதைக்கப்பட்டு வருகின்றன.

இந்து மகாசபையை சவார்க்கர் உருவாக்கும்போதே, இங்கிருந்து புறப்படும் ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு துறைக்குள் நுழைந்து நமது சித்தாந்தத்தை அங்கு பரப்பி, அந்தந்த துறையை நம் வசப்படுத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டார். அந்த துறைகளில் சக்தி வாய்ந்த சினிமா என்ற ஊடகமும் ஒன்று. இப்படித்தான் சங்கிகள் தங்களது சந்ததியினரை சினிமா படிப்புகளை படிக்க வைத்து, இந்த துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது கடந்த 10 ஆண்டுகளில் புற்றீசல் போல பெருகி வெளியே வந்துவிட்டார்கள். விளைவு, இப்போதெல்லாம் மாதத்துக்கு ஒரு படம் அல்ல, வாரத்துக்கு ஒரு படம் இஸ்லாமிய வெறுப்பை கொண்டு வெளியாகி வருகிறது. கடந்த வாரத்தில் ‘ரஸாக்கர்’ வந்தது. இந்த வாரத்தில் ‘ஜெஎன்யூ’ வருகிறது. இதையடுத்து ‘1947 கொல்கத்தா’ என்ற படம் பிரிவினையை பற்றிய கதையாக வெளியாகிறது. ஆனால் இந்த சம்பவங்களுக்கு நடுவேதான் ‘முல்க்’, ‘ஜனகண மன’, ‘ஜெய் பீம்’, ‘அசுரன்’, ‘அஃப்வா’, ‘பிகே’ உள்ளிட்ட சில படங்கள் நமது ஜனநாயகத்தின் மற்றொரு முகத்தை பிரதிபலிக்கிறது. இந்த நாட்டின் நிஜ அடையாளம், மதச்சார்பற்ற நாடு என்பதுதான். அதை கலை மூலம் பாஜ சிதைக்க நினைத்தால் அதற்கு தகுந்த விலை தர வேண்டிய தருணமும் வரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post இந்திய சினிமாவில் அதிரடியாக புகுத்தப்பட்ட இந்துத்துவா: ஒருபுறம் இந்துத்துவ கருத்துகள்: மறுபுறம் இஸ்லாமிய வெறுப்பு: சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: