1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிப்பு: துரித உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தல்

சிறப்பு செய்தி
இந்தியாவில் 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பாதிப்பை தடுக்க துரித உணவு மற்றும் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இந்திய குழந்தைகள் சங்கம் சேலம் மற்றும் நாமக்கல் கிளை சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவர் செந்தில்ராஜா வரவேற்றார். மருத்துவர்கள் ரேஷ்மி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள், உடற்பயிற்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தாய்மார்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இந்திய குழந்தைகள் சங்கத்தின் சேலம் மற்றும் நாமக்கல் கிளையின் செயலாளர் மருத்துவர் சசிஆனந்த் கூறியதாவது: கடந்த காலங்களில் உடல் பருமன் என்பது நகரங்களில் காணப்பட்டது. ஆனால், தற்போது கிராமம், நகரம் என்ற பாரபட்சம் இன்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நவீன வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக உடல் உழைப்பு என்பது முற்றிலும் குறைந்து விட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிவி, செல்போன் சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் செலவிடுகின்றனர். உடலுக்கு போதுமான உடற்பயிற்சி இல்லாததால் அதிக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட ெநாறுக்கு தீனிகளை அதிகம் உட்கொள்வதே முக்கிய காரணம் ஆகும். பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இந்த மாதிரியான ெநாறுக்கு தீனிகள் பற்றிய விளம்பரங்களே அதிகளவு வருகிறது. இந்த விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கும் போது அந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மத்தியில் உருவாகிறது. குழந்தைகளும் இந்த உணவுகளை தங்கள் பெற்றோரிடம் கேட்கின்றனர்.

பெற்றோர்களும் வேறு வழியில்லாமல் இந்த உணவுகளை வாங்கிக்கொடுத்து பழகி விடுகின்றனர்.மேலும் கடந்த காலங்களைப் போல, இன்றைய தலைமுறை குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதில்லை. பெரும்பாலன நேரங்களில் வீடுகளிலேயே அடை ந்து கா ணப் படுகின்றனர். வீட்டிலேயே குழந்தைகள் அடைந்து காணப்படுவதால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க முடியாத அபாயம் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு தேவையில்லாத சதைபிடிப்பு மற்றும் கொழுப்பு படிகிறது. மேலும் 60 வயதில் வரக்கூடிய நோய்கள் பெரும்பாலும் இள வயதிலேயே ஏற்படுகிறது. 5 அல்லது 10 வயதில் உடல் பருமனோடு குழந்தைகள் இருந்தால், பெரியவர்கள் ஆனாலும் அதே உடல் எடையோடு இருக்கும் அபாயம் நிலவுகிறது.

இந்தியாவில் 2022ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 5 முதல் 19 வயதிற்கு உட்பட்ட 1.25 கோடி குழந்தைகள் அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல், நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 43 லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட உடல் பருமன் குழந்தைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனையில் 5 முதல் 6.1 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் வருங்காலத்தில் சர்க்கரை, மூட்டு தேய்மானம், ரத்த அழுத்தம், இரவு நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம், இதயபாதிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மிக எளிதாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதே நிலை நீடித்தால் 2035 ஆண்டுக்குள் 9 சதவீதம் வரை உடல் பருமன் பாதிப்பு உயரும் நிலை உள்ளது.

குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளவு பிஎம்ஐ மூலம் நிர்ணயிக்கப்படும். இந்த பிஎம்ஐ அளவு படி சரியான அளவில் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பை தடுக்க துரித உணவுகள், எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்புகள் சேர்த்து சாப்பிடுவதை குறைக்க வேண்டும். செல்போன், டிவி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, ஏதாவது ஒரு விளையாட்டில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிப்பு: துரித உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: