நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…

நன்றி குங்குமம் தோழி

மனிதவள மேம்பாட்டுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று பல சர்வதேச உறைவிட பள்ளியில் நிர்வாக மேலாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர்
சென்னையைச் சேர்ந்த ராஜலஷ்மி. நிர்வாகப் பணிகள், எழுத்தாளர், கவிதாயினி, மொழியாக்க வல்லுனர் என்கிற பன்முகத்திறமை கொண்ட ராஜலஷ்மி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஜப்பானிய மொழி என பல்வேறு மொழிகளை சரளமாக பேசுவதோடு, இந்தியாவின் பல்வேறு மொழிகளை நன்றாக புரிந்துகொள்ளும் திறமை பெற்றவர். கொரோனா காலகட்டத்தில் ஓய்வாக இருந்த நாட்களில் எழுத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக எழுத ஆரம்பித்தார். சரித்திர நாவல்கள் மற்றும் நாடகம் எழுதுவதில் வல்லவர். பல்வேறு ஓ.டி.டியில் மொழியாக்கப் பணிகளை செய்து வருகிறார். வெள்ளித்திரையில் ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதையும் வசனமும் எழுதி வைத்துள்ளார். கூடிய விரைவில் அத்திரைப்பட வேலைகளை தொடங்க உள்ளார்.

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்…

பொருளியல் பட்டதாரியான நான் சென்னையில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் முதுகலைப் பட்டம் முடித்தப்பின் கோயமுத்தூரில் உள்ள பிரபல பள்ளியில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வந்தேன். பின்னர் சென்னைக்கு வந்த பிறகு இங்குள்ள சர்வதேசப் பள்ளியில் நிர்வாக அலுவலராக இருந்தேன். சில வருடங்கள் ஊட்டி பள்ளியிலும் நிர்வாக அலுவலராக பணியாற்றி இருக்கேன். பின்னர் புனேவில் கிருஷ்ண மூர்த்தி ஃபவுண்டேஷன் நிர்வகித்து வரும் பள்ளியில் நிர்வாக அலுவலராக வேலைப் பார்த்தேன். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிரபல கம்பெனி ஒன்றில் நிர்வாகத்துறையிலும் பணியாற்றி வந்தேன்.

ஜப்பானிய மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது?

என் கல்லூரி தோழி ஒருவர் ஐப்பானிய மொழியில் மிகுந்த புலமைப் பெற்று இருந்தாள். அவளை பார்த்து எனக்கும் ஐப்பானிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் முதலிலேயே ஏற்பட்டது. அப்போது சில சொந்தக் காரணங்களால் என்னால் அதனை கற்க இயலவில்லை. பின்னர் நான் வேலையை விட்டு நின்று விட்ட பிறகுதான் எனக்கு மீண்டும் ஐப்பான் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை என்னுள் துளிர்விட்டது. 2011ல் ஆரம்பித்து இரண்டு வருடம் அந்த மொழியினைக் கற்றுக்கொண்டேன். 2013ல் ஆரம்பித்து ஏழு வருடம், அதிதி ஜப்பானிய மொழிப் பயிற்சி பள்ளியை ABK- AOTS DOSOKAI, JAPAN FOUNDATION நிறுவனத்தின் கீழ் வெற்றிகரமாக நடத்தி வந்தேன். பலருக்கு ஜப்பான் ெமாழியினை சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டது போல் எனக்கு அந்த ஊரையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தனியாக சென்று அங்கு சுமார் ஒரு மாதம் தங்கினேன். டோக்கியோ, க்யோடோ போன்ற நகரங்களை சுற்றிப் பார்த்தேன். ஜப்பானிய மக்களின் சுறுசுறுப்பு, திட்டமிடல், ஒழுங்கு, நேரம் தவறாமை, சிக்கனம், இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வு முறை என நேரடியாக உணரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலகில் ஐப்பான் மக்கள் தொகையில் வயதானவர்கள் அதிகமுள்ள நாடு. அடிக்கடி இயற்கை சீற்றங்களை சந்திக்கும் நாடு.

எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணம்?

2020 கொரோனா காலகட்டத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூலில் பல போட்டிகளை வைத்தார். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அப்போதுதான் எனக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அவர் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டேன். அதன் மூலம் ‘பேசும் பலகை’ என்னும் நாடகத் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எழுத்துத்துறையில் பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. நிறைய நாவல்கள் எழுதி வருகிறேன்.

அதில் முக்கியமாக எனக்கு சரித்திர நாவல்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. படிக்கும் காலத்திலேயே வரலாறு என்றால் எனக்கு பிடிக்கும். எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்ட போது சரித்திர நாவல்கள் எழுதினால் என்ன என்கிற எண்ணம்தான் முதலில் தோன்றியது. சரித்திர நாவல்கள் எழுத நிறைய ஆய்வு செய்ய வேண்டும். வெறும் புனைவாகவே முழு நாவலையும் எழுதிவிட முடியாது. உண்மை தரவுகளோடு கொஞ்சம் புனைவு கலந்து எழுதினால்தான் சரித்திர நாவல்கள் சிறப்பாக வரும்.

நாவல்களுக்கான சரித்திர ஆதாரங்களை திரட்ட ஆறு மாதங்கள் கூட ஆகும். அப்படி எழுதப்பட்ட எனது முதல் நாவலான ‘கன்னி நெஞ்சின் ஓவியம்’ வாசகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுத்தந்தது. எனது ‘பேய்க்கொம்பன்’ சிறுகதை இலக்கிய இதழ் போட்டியில் பரிசும் வென்றது. இப்படியாகத்தான் எனது எழுத்து ஆர்வம் துவங்கியது. அதே போன்று கவிதைகள் எழுதுவதிலும் எனக்கு பெரும் ஆர்வமுண்டு. பல இதழ்களில் எனது கவிதைகளும் வெளியாகியுள்ளது.

உங்கள் மொழியாக்கப் பணிகள்…

நான் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு மொழியாக்கம் செய்து வருகிறேன். எனக்கு பல மொழிகள் சரளமாகத் தெரியும் என்பதால் மொழியாக்கம் செய்வது சுலபமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் செய்கிறேன். குறிப்பாக ஹிந்தி, ஆங்கில ஓடிடி தொடர்கள் மற்றும் திரைப்படங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்கிறேன். எந்த ஒரு மொழியில் மொழியாக்கம் செய்தாலும், அந்த மொழி நேயர்கள் புரிதலுக்கு ஏற்ப செய்ய வேண்டும். உதாரணமாக, பிற மொழிகளின் பழமொழிகள், சொலவடைகளை அப்படியே பயன்படுத்தாமல் அதற்கு இணையாக தமிழில் மொழியாக்கத்துடன் எழுத வேண்டும்.

அதே போன்று நடிகர்கள் பேசும் உதட்டசைவுகளுக்கு ஏற்ப வசனங்கள் இருக்க வேண்டும். இதில் தட்டச்சு செய்வது ஒருவிதம். மற்றொன்று பாத்திரங்கள் பேசுவதை தமிழில் மொழியாக்கம் செய்து அதனை அப்படியே பேசி பதிவு செய்து தருவது. இதனை transcreation என்று சொல்வோம். நான் பேசி பதிவு செய்த வசனங்களை காதில் கேட்டபடி அதை டப்பிங் கலைஞர்கள் பேசுவார்கள்.

சினிமாத்துறை அனுபவம்…

தற்போது புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் ஒருவரின் பெயரிடப்படாத திரைப்படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வருகிறேன். அந்த திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வும் பைலட் ஷூட்டும் விரைவில் நடக்கவிருக்கின்றன. பிரபல எஃப் எம்மில் கன்டென்ட் ரைட்டிங் செய்து வருகிறேன். ஒரு புதிய படத்துக்கு திரைப்படப் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு நல்ல எழுத்தாளர் என்று பெயர் எடுக்க வேண்டும். நான் இவை அனைத்தையும் என்னுடைய நடுத்தர வயதில்தான் செய்யத் துவங்கினேன்.

அதனால் என்னைப் பொறுத்தவரை வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். என்னுடைய வயதில் இருக்கும் பெண்களுக்கு நான் ஒரு உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என்னால் முடிந்தது அவர்களாலும் நிச்சயமாக முடியும். அதனால் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைக் கண்டு தயங்காமல் நம்பிக்கையுடன் முயன்றால் எந்த வயதிலும் வெற்றியை சந்திக்கலாம்’’ என்கிறார் ராஜலஷ்மி.

தொகுப்பு: தனுஜா

The post நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை… appeared first on Dinakaran.

Related Stories: