காலத்திற்கும் நிலைக்கும் வகையில் ஏற்பாடு: ரூ.600 கோடியில் 9 கட்டுமான பணிகளை நிறைவு செய்தது நீர்வளத்துறை

* திருச்சியில் ரூ.423 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவு

* டெல்டாவில் 12.58 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு பயன்

தமிழ்நாட்டில் நீர்வளத்திற்கும், அதனை திறம்பட மேலாண்மை செய்வதற்கும் மாநிலத்தின் அனைத்து நீர்த்தேவைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கோடு தனித்துறையாக நீர்வளத்துறை செயல்பட்டு வருகிறது. அதன்படி புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தல் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை பராமரிப்பதன் மூலம் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறைகளின் நீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

அணைகள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், நீரொழுங்கிகள், கதவணைகள், ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநிலத்திற்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கிடையேயும் பாயும் நதிகளை இணைத்தல் போன்ற பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு, மேற்பரப்பு நீரை மேம்படுத்திட வழிவகை செய்து வருகிறது.  மேலும் செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரின் அளவையும், தன்மையையும் மேம்படுத்துகிறது.

அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை பாதுகாத்தல் மற்றும் புதிய ஆக்கிரமிப்புகளை தடுத்தல் ஆகியவற்றை நீர்வளத்துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. தூர்வாருதல் மற்றும் நிலைப்படுத்துதல் மூலம் நீர்த்தேக்கங்கள் மற்றும் கண்மாய்களின் சேமிப்பு திறனை மீட்டெடுக்கவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் போதிய தண்ணீர் இருப்பு மற்றும் வெள்ளத்தை மேலாண்மை செய்தல் ஆகியவை அடையாளம் காணப்படுகிறது.

இந்நிலையில், நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்வதற்கு எவ்வளவு காலம் ஆகிறதோ அதேபோன்ற அதன் பயன்களும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் அளவிற்கு மேற்கொள்ளப்படுகிறது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.600 கோடியில் 9 கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் நீர்வளத்துறை தரப்பில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டம் க.இளமங்கலம் கிராமத்தில் நரி ஓடையின் குறுக்கே பாலத்துடன் கூடிய கதவணை ரூ.12 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டம், பெருமாள் ஏரியை தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்தும் பணி ரூ.112.42 கோடியில் நிறைவடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், மட்ரப்பள்ளி கிராமம் அருகே பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி ரூ.3.80 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய நீரொழுங்கி கட்டும் பணி ரூ.414 கோடியில் நிறைவடைந்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் -காணக்கிளியநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தியாற்றில் தடுப்பணை கட்டும் பணி ரூ.9.24 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள கோமங்கலம் பகிர்மான கால்வாயை புனரமைக்கும் பணி ரூ.2 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள உடுமலை கால்வாயில் பிரியும் மானுப்பட்டி கிளை கால்வாயில் கால்வாய் சைபன்கள் மற்றும் குறுக்கு கட்டுமானங்கள் புனரமைக்கும் பணி ரூ.2.50 கோடியில் நீர்வளத்துறையால் நிறைவு பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கனக்கம்பாளையம் ஓடையில் இடது மற்றும் வலது புறங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணி ரூ.9.60 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் கட்டிக்குளம்,

மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க கட்டிக்குளம், மிளகனூர், முத்தனேந்தல், துத்திக்குளம், கிருங்காகோட்டை, கால்பிரிவு, கீழமேல்குடி மற்றும் மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணி ரூ.30.80 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் ரூ.600 கோடி செலவில் 9 கட்டுமான பணிகளை நிறைவு செய்துள்ளோம். மேலும், பல கட்டுமான பணிகள், புனரமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

* திருச்சி மண்டலம் திருச்சி (மண்ணச்சநல்லூர்)
திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள 12.58 லட்சம் ஏக்கர் பாசனபரப்பு பயனடைய
உள்ளது.

திருச்சி (லால்குடி) 1.78 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுகிறது. காணக்கிளயநல்லூர், சிறுவயலூர், பெருவளப்பூர், சிறுகளப்பூர், வந்தலை மற்றும் கூடலூர் கிராமங்களில் உள்ள 424 பயனாளிகள் பயனடைகிறார்கள். 647.08 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது. 37 கிணறுகள் மற்றும் 36 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

* சென்னை மண்டலம் கடலூர் மாவட்டம் (விருத்தாசலம்) இளமங்கலம் உட்பட 3 கிராமங்களில் உள்ள 3,300 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர். 775 ஏக்கர் விளைநிலங்களில் விளை பொருட்கள் எடுத்து செல்ல முடியும். 47 ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்மட்டம் 350 அடி ஆழத்திலிருந்து 40 அடியாக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் (குறிஞ்சிபாடி)6503 ஏக்கர் விளை நிலங்கள் ஒருபோக சாகுபடி நிலையில் இருந்து 3 போக சாகுபடி செய்ய இயலும். 20 கிராமங்களை சார்ந்த சுமார் 4250 விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். 320 கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் (திருப்பத்தூர்)30 கிணறுகளில் நீர்மட்டம் உயரும். 612.20 ஏக்கர் விளை நிலம் பாசனம் பெறும்.

* கோவை மண்டலம் கோவை மாவட்டம் (பொள்ளாச்சி) இத்திட்டத்தின் மூலம் 2512 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோமங்கலம் மற்றும் கோமங்கலம்புதூர் கிராமங்களை சார்ந்த 1220 விவசாயிகள் பயனடைகின்றனர். இப்பணிகள் பகிர்மான கால்வாயின் இருபுறமும் 1500 மீட்டர் நீளத்திற்கு தரைதள கான்கிரீட் போடப்பட்டுள்ளது. மேலும் 4 சைபன்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

* திருப்பூர் மாவட்டம் (உடுமலைப்பேட்டை)
இத்திட்டத்தின் மூலம் 6500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4300 விவசாயிகள் பயனடைகின்றனர். இந்த பணிகளில் 10,200 கி.மீ நீளமுள்ள வாய்க்காலில் குறுக்கு கட்டுமானங்கள் புனரமைக்கப்பட்டும் மற்றும் 3 சைபன்கள் கட்டப்பட்டுள்ளன.

* ஈரோடு மாவட்டம் (கோபிசெட்டிப்பாளையம்)
இந்த திட்டம் மூலம் 1500 மீட்டர் நீளமுள்ள தடுப்பு சுவர் ஓடையின் இரு கரைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடைகளில் ஏற்படும் வெள்ளம் ஊருக்குள் புகுவது தடுக்கப்பட்டு, பொதுமக்கள் பயமின்றி வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post காலத்திற்கும் நிலைக்கும் வகையில் ஏற்பாடு: ரூ.600 கோடியில் 9 கட்டுமான பணிகளை நிறைவு செய்தது நீர்வளத்துறை appeared first on Dinakaran.

Related Stories: