நெற்றி, மூக்கில் படுகாயம் மம்தாவை தள்ளிவிட்டது யார்?

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தள்ளிவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி(69) நேற்று முன்தினம் நெற்றியில் பெரிய வெட்டு காயம், மூக்கு பகுதியில் காயம் அடைந்து ரத்தம் வழிந்த முகத்துடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வௌியானது. அவர் கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில தன் வீட்டில் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, “யாரோ பின்னால் இருந்து தள்ளி விட்டது போன்று உணர்ந்த மம்தா பானர்ஜி கீழே விழுந்து, அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்” என்று தெரிவித்தார். சிகிச்சை முடிந்து மம்தா நேற்றுமுன்தினம் நள்ளிரவே வீடு திரும்பினார். தற்போது மம்தா காயம் அடைந்தது அரசியல் சர்ச்சையாக மாறி உள்ளது. மம்தா காயம் அடைந்தது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜ எம்பி திலீப் கோஷ்தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில்,’உண்மையை வெளிக்கொண்டு வர முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல்வர் எப்படி விழுந்தார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது ஒவ்வொரு குடிமகனின் உரிமை’ என்றார். இதற்கு பதில் அளித்த மேற்கு வங்க அமைச்சர் ஷஷி பஞ்சா, ‘இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம். சில சமயங்களில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது கீழே விழுந்து, யாரோ உங்களைத் தள்ளினார்கள் என்ற உணர்வு ஏற்படும். மருத்துவ அறிவியலில் இது மிகவும் சாதாரணமானது’என்றார்.

The post நெற்றி, மூக்கில் படுகாயம் மம்தாவை தள்ளிவிட்டது யார்? appeared first on Dinakaran.

Related Stories: