உங்க பாதுகாப்பிற்கு நாங்க இருக்கிறோம்!

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கென பஸ் மற்றும் பறக்கும் ரயில்களில் தனிப்பெட்டி என்ற வரிசையில் சென்னை மெட்ரோ ரயிலிலும் பெண்களுக்கு என பிங்க் நிறத்தில் தனிப்பெட்டி இயங்கி வருகிறது. பெண்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதாகவே இந்தப் பெட்டியினை அடையாளம் காணும் வகையில் பிங்க் நிறத்தில் அமைத்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலினை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதால் மெட்ரோ நிர்வாகம் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் பெண்களை மெட்ரோவில் பயணிக்க ஊக்குவிக்கும் வகையில் ‘பிங்க் ஸ்குவாட்’ என்ற குழுவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் அவர்கள் விவரித்தார்.

‘‘சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதற்காகத்தான் முதலில் அவர்களுக்கு என தனிப்பட்ட பெட்டியினை அறிமுகம் செய்தோம். அதனைத் தொடர்ந்து ‘பிங்க் ஸ்குவாட்’ என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அமைக்கும் முன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது.

அதில் பல பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை அவசியம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். காரணம், இப்போது பலர் வசதியைக் கருதி மெட்ரோவில் பயணிக்கின்றனர். குறிப்பாக அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள். இதனால் கூட்ட நெரிசல் நேரங்களில் பெண்களுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

மெட்ரோ ரயிலில் இருக்கக்கூடிய பொது பெட்டிகளைத் தவிர்த்து சில ஆண்கள், மகளிர் பெட்டிகளில் பயணம் செய்வதாகவும் புகார்கள் எங்களுக்கு வந்தது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிராக நிகழக்கூடிய ஈவ்டீசிங் மற்றும் பிற குற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் குழுவை நியமித்துள்ளோம். 23 பெண் பாதுகாவலர்கள் அடங்கிய குழுதான் இந்த பிங்க் ஸ்குவாட். அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரயில் நிலையங்களான புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் சென்னை விமான நிலையம் மெட்ரோ ஆகியவற்றில் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தற்காலிகமாக சி.எம்.ஆர்.எல் உதவி எண்ணை (18604251515) தொடர்பு கொள்ளலாம். கூடிய விரைவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து மகளிர் உதவிக்காக பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளோம். 23 பெண் பாதுகாவலர்களும் தற்காப்புக் கலைகள் மற்றும் நுட்பங்களில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர்கள். தவிர, வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்” என கூறினார்.

‘‘நாங்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு தற்காப்புக் கலைகளில் சிறந்தவர்கள்’’ என்று பேசத் துவங்கினார் பிங்க ஸ்குவாட் பாதுகாவலர்களில் ஒருவரான சரண்யா. ‘‘கராத்தே, பாக்ஸிங், சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் மற்றும் நுட்பங்களில் நாங்க பயிற்சி பெற்றிருக்கிறோம். எங்களின் பாதி பெண்கள் பட்டப்படிப்பினை முடித்துள்ளனர். நாங்க இரண்டு நேரமாக வேலை செய்வோம். மெட்ரோ ரயில் இயங்க ஆரம்பிக்கும் காலை முதல் அதன் கடைசி வண்டி வரை எங்களின் பணி இருப்பதால், நாங்க இரண்டு ஷிஃப்டின் அடிப்படையில் வேலைப் பார்க்கிறோம். ரயிலின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று கண்காணிப்போம். முக்கியமாக பெண்களை யாராவது அச்சுறுத்துகிறார்களா அல்லது பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் ஆண்களை கவனித்து வெளியேற்றுவது மற்றும் பெண்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்ப்பதுதான் எங்களின் முக்கிய வேலை. எங்களுக்கு என தனிப்பட்ட எண் கொடுக்க உள்ளனர்.

அந்த எண்ணினை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய செல்போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பிரச்னையில் இருக்கும் போது, அந்த எண்ணிற்கு அழைத்தால் நாங்க உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றிடுவோம். தனியாக பயணம் செய்ய பயப்படும் பெண்கள் குறிப்பாக இரவு நேரங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதுதான் எங்களுடைய வேலை.

நாங்கள் அனைவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் சூழலை வழங்குவதற்காகவே பிங்க் ஸ்குவாடினை அறிமுகம் செய்துள்ளது’’ என்றார்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: சதீஷ்

The post உங்க பாதுகாப்பிற்கு நாங்க இருக்கிறோம்! appeared first on Dinakaran.

Related Stories: