போராட்டங்களைப் பார்த்தே வளர்ந்தேன்…கண்ணகி (NFIW)

நன்றி குங்குமம் தோழி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்(NFIW) மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருப்பவர் கண்ணகி. கூட்டங்களில் மேடை ஏறிப் பேசுவது… மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்பது… பெண்கள் பிரச்னையில் களத்தில் நின்று போராடி தீர்வைப் பெற்றுத்தருவது என எல்லோருக்கும் தெரிந்த முகமாகவும் இருக்கிறார். கூடுமானவரை நடந்தே செல்வது, அரசுப் பேருந்துகளில் மட்டுமே பயணிப்பது, எளிமையான தோற்றத்தில் இருப்பது, மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது என்பதே கண்ணகியின் அடையாளம்.

மார்ச்-8 மகளிர் தினத்தை ஒட்டி அவரிடம் பேசியதில்…

நீங்கள் அரசியலுக்குள் வந்தது எப்படி?

எனக்கு ஊர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர். என்னுடைய 18 வயதில் அதாவது, 1980ல் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அமைப்புக்குள் உறுப்பினராய் நுழைந்தவள் நான்.  நான் குழந்தையாக இருந்தபோது ஆதிக்க சமூகம் தலித் மக்களை அடக்கி ஒடுக்கிய அடக்குமுறை காலமாக இருந்தது. ஆதிக்க சாதியினர் முன்பு தலித் மக்கள் துண்டு போடுவது, செருப்பு அணிந்து நடப்பது போன்றவற்றைச் செய்ய முடியாது. அவர்கள் முன்பு துண்டை கக்கத்தில் வைத்து வளைந்து குனிந்து நிற்கும் நிலையே இருந்தது. இந்த நிலையில்தான் ஆதிக்க சாதியினருக்கு எதிரான போராட்டங்களில் தலித் மக்கள் ஒன்று திரண்டனர்.

என் அம்மா, அப்பா இருவருமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்கள். அப்பா திருப்பத்தூர் தாலுகாவில் களப் பணியாற்றியவர். அம்மா மாதர் சங்கத்தில் இருந்தவர். இயக்கம் நடத்தும் பல்வேறு போராட்டங்கள் என் வீட்டுக்கு அருகிலேயே நடைபெறும். எளிய மக்களுக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்த நேரம் அது. என் அப்பா எப்போது வருவார் என்று ஆதிக்க சக்திகள் அருவாளுடன் என் வீட்டருகிலேயே காத்திருப்பர்.

நானும் அப்பா, அம்மாவோடு போராட்டக் களங்களுக்கு சென்றிருக்கிறேன். பெற்றோரின் களப்பணி, அவர்களின் போராட்டங்கள், மக்களுக்காக அவர்கள் செய்யும் சேவை இவற்றையெல்லாம் பார்த்தே நான் வளர்ந்ததால் எனக்குள்ளும் போராட்ட குணம் இயல்பாக இருந்தது. அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் திருப்பத்தூர் ஒன்றியத்தின் செயலாளராக செயல்பட்டவர். எனது கணவரும் கட்சியின் முழுநேர ஊழியர் என்பதால் அவரைத் தொடர்ந்து எனது கணவர் செயலாளராக இருந்தார்.

அப்போது நான் சத்துணவுப் பணியாளராக பணியில் இருக்கிறேன். அதிமுக அப்போது ஆட்சியில் இருந்தது. சத்துணவுப் பணியாளராக இருந்து கொண்டு பிரச்சாரம் மற்றும் போராட்டக்களங்களில் நான் ஈடுபடுவதை காணொளியாக்கி என்னை பணிநீக்கம் செய்தனர். அதன் பிறகே கட்சியில் முழு நேரக் களப்பணியாற்றத் தொடங்கினேன்கட்சியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் குறித்து…

இந்தியாவில் உள்ள இடதுசாரி அமைப்புகளில் இரண்டாவது மாவட்டச் செயலாளர் நான். அதேபோல் மாவட்டச் செயலாளர்களில் நான்தான் முதல் பெண் மாவட்டச் செயலாளர். கூடுதலாக இந்திய தேசிய மாதர் சம்மேளத்தினுடைய(NFIW) மாநிலச் செயலாளர் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெருமைகளை எல்லாம் சிவகங்கை மாவட்டத்திற்கு கட்சி வழங்கியிருக்கிறது. கூடவே எனக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய பொறுப்புகள் இவை.

துவக்கத்தில் கட்சி அங்கீகரித்ததன் அடிப்படையில் 3 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் மூன்றுமுறையும் தொடர்ந்து வெற்றி பெற்றேன். பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாட்டுத் தேர்தலில் தேர்வாகி 4 ஆண்டுகள் மாவட்டம் முழுமையும் களப் பணியாற்றினேன்.

மீண்டும் வந்த அடுத்த மாநாட்டிலும், மாவட்டச் செயலாளராக மீண்டும் தேர்வானேன். தற்போது இந்த மாவட்டங்களின் எல்லா ஒன்றியங்களிலும் கட்சிப் பணிகளை செய்து வருகிறேன். கட்சியின் மாநில நிர்வாகக் குழுவிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். தேசியக் குழுவிலும் நான் இருக்கிறேன்.அதேபோல் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளராக களப் பணியாற்றினேன். இதில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் எனது பொறுப்பில்இருந்தது. தற்போது இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

தங்களின் போராட்டங்கள் குறித்து…

எனது இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களில் களத்தில் நின்றிருக்கிறேன். அரசுக்கு எதிராக பல நூதனமான போராட்டங்கள்… கட்சி அறிவிக்கிற அகில இந்தியப் போராட்டங்கள்… விலைவாசி உயர்வு, கேஸ் விலை ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை, பொருளாதாரத்திற்கு எதிர் விரோதக் கொள்கை, டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டங்கள், விவசாயிகளின் நலனுக்கு எதிரான கொள்கை, மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, இவற்றை எதிர்த்து கட்சி போடுகிற தீர்மானங்கள், அதற்கான போராட்டங்களை சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன்.

அதேபோல் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்(NFIW) அகில இந்தியத் தலைமை, மாநிலத் தலைமை அறிவிக்கிற அத்தனை போராட்டங்களையும், சிவகங்கை மாவட்டத்திலும் நடத்தியிருக்கிறோம். மாவட்டம் முழுமையும் பெண்களுக்கான பிரச்னைகளை கையிலெடுத்தும் போராட்டங்களைச் செய்து வருகிறோம். சமீபத்தில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி, மறியல் செய்து கைது செய்யப்பட்டோம்.

இன்று காலையில் கைதானால் மண்டபத்தில் வைத்துவிட்டு அதேநாள் மாலையில் விடுவிக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு பல்வேறு போராட்டங்களில் கைதாகி பல்வேறு சிறைச் சாலைகளுக்கும் சென்று வந்திருக்கிறோம்.

கட்சிப் பணியில் உங்களுக்கான சவால்கள் குறித்து…

கட்சித் தலைமை எடுக்கும் முடிவை கீழே உள்ள நபர் வரை கொண்டு சேர்த்து அவற்றை அமல்படுத்த வேண்டும். கட்சியின் கிளைச் செயலாளர்கள், கிளை அமைப்புகள், இடை குழு அமைப்பு, மாவட்ட அமைப்பு போன்றவற்றுக்கு பாலமாக இருந்து செயல்படுவதுடன், கீழிருக்கும் பிரச்னைகளை மேலே கொண்டு வருவது, மேலே இருப்பவர்கள் எடுக்கும் முடிவை கீழே கொண்டு சேர்ப்பதுமாக செயலாற்ற வேண்டும்.அதேபோல் போராட்டம் எனச் சொன்னதுமே யாரும் வந்து களத்தில் நிற்பதில்லை. இதற்கென இடை குழு செயலாளர் களைச் சந்திப்பது, கிளை வாரியாக சென்று மக்களை திரட்டி போராட்டக் களங்களில் நிறுத்துவது. போராட்டக் களத்தில் மக்களைத் திரட்டுவதற்கான ஒத்துழைப்பைக் கொடுப்பது.

இடைச் செயலாளர்கள், கிளைக்குழு செயலாளர்களோடு வீதிகளில் இறங்கி நின்று துண்டு பிரசுரம் விநியோகிப்பது, கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதென செயல்பாடுகள் இருக்கும்.

பெண்களுக்கு சொல்லும் செய்தி…

500 ரூபாய் கொடுத்தால் ஓட்டுப் போடும் அளவில் பெண்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் வறுமையை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்றே அர்த்தம். அரசியலில் பெண்கள் அதிக அளவில் விழிப்புணர்வு பெற வேண்டும். குறிப்பாக பெண்களின் உரிமைக்காக போராடிப் பெற்ற தினம்தான் மார்ச் 8. இன்றைக்கும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டே வருகிறது.

மத்தியில் ஆளும் ஒன்றிய அரசின் கொள்கையில் இருக்கும் பிற்போக்குத்தனமான மூடப் பழக்க வழக்கத்தால் மேலும் பின்னுக்குத் தள்ளக்கூடிய நிலையில்தான் பெண்களின் நிலை இருக்கிறது.இந்த மார்ச் 8ல் “பெண்ணுரிமையை காப்போம்… பாலின சமத்துவம் பெறுவோம்” என்கிற கோஷத்தை முன்வைத்து அன்று நடந்த போராட்டங்களை விட பல மடங்கு அளவில் பெண்கள் ஒன்றிணைந்து, ஒன்றுபட்ட இயக்கமாக பெண்களுக்கான வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

இங்கு வாக்கு வங்கி என்பது பெண்கள்தான். போராடிப் பெற்ற
தங்களின் வாக்குரிமையை பெண்கள் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post போராட்டங்களைப் பார்த்தே வளர்ந்தேன்…கண்ணகி (NFIW) appeared first on Dinakaran.

Related Stories: