மண்ணில் புதைந்த கோயில் புனரமைப்பு ஆந்திராவில் பழங்கால பஞ்சலோக சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

*பூஜை செய்து வழிபட்ட கிராமமக்கள்

திருமலை : ஆந்திராவில் மண்ணில் புதைந்த கோயில் புனரமைப்பின்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமி பஞ்சலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சுவாமி சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பலமநேர் மண்டலம் கூர்மை கிராமத்தில் கூர்மவரதராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் 12ம் நூற்றாண்டில் கவுண்டன்யா நதிக்கரையில் கட்டப்பட்டதாக சான்றுகள் கூறுகிறது.

அப்போது, முகமதியர்களின் படையெடுப்பால், கிராம மக்கள் கோயில் முழுவதும் மணலால் மூடி யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 1950ம் ஆண்டு கர்நாடக மாநிலம், நங்கிலி அருகே உள்ள கரிடிகானிபள்ளியைச் சேர்ந்த செங்காரெட்டி என்ற விவசாயி இக்கிராமத்திற்கு வந்தார். அப்போது, ​​கோயிலின் மேற்பகுதி மண்ணில் தெரிவதை பார்த்து கோயில் இருப்பதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பாழடைந்த நிலையில் உள்ள இக்கோயிலை சீரமைக்க கடந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை துறை சார்பில் ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி கோயில் அஸ்திவாரத்திற்காக பள்ளம் தோண்டினர். அப்போது சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் புதைந்து காணப்பட்டது. அதில், சுமார் 2.5 அடி உயரமுள்ள சங்கு, சக்கரங்களுடன் கூடிய சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கூடிய பஞ்சலோக சிலைகள், பூஜைக்கு பயன்படும் உலோகப்பொருட்கள் ஆகியவை இருந்தது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

முகமதியர்களின் படையெடுப்பின்போது கிராம மக்கள் கோயிலை மணலால் மூடி வைத்திருந்தபோது சிலைகளை கருவறையின் கீழ் புதைத்திருப்பார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு கிராம மக்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, திருப்பணி முடிந்ததும் கோயிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளனர்.

The post மண்ணில் புதைந்த கோயில் புனரமைப்பு ஆந்திராவில் பழங்கால பஞ்சலோக சுவாமி சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: