16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்

திருமலை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 76,945 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 33,844 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.2.67 கோடி காணிக்கையாக கிடைத்தது.

இன்று அதிகாலை முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சுகள் அனைத்தும் நிரம்பி ஏடிசி சர்க்கிள் பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் சுமார் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், திருப்பதி கலெக்டர் பிரவீன்குமார். எஸ்பி கிருஷ்ணகாந்த் ஆகியோர் அளித்த பேட்டி: ஆந்திராவில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவார்கள். எனவே கோயிலுக்கு வருபவர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது. அவர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம். அதே நேரத்தில் கள்ள வாக்குப்பதிவு செய்யும் நோக்கில் இருந்தால் அவர்கள் மீது போலீசார் கிரிமினல் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: