உன்னத உறவுகள் மலர்ந்த நினைவுகள்…

நன்றி குங்குமம் தோழி

இன்றைய காலகட்டத்தில் வசதிகள் அனைத்தும் நமக்குக் கிடைத்துவிட்டன, ஆனால் குடும்பங்களில் மகிழ்ச்சி வெகுவாக குறைந்துவிட்டது. பாச – பந்தங்களை பணம் கொடுத்தாலும் வாங்கமுடியாது. வசதிகள் இல்லாத காலகட்டத்தில் உறவுகள் புடைசூழ நாம் வாழ்ந்த இன்பமயமான நாட்கள் காணாமல் போயின. அத்தகைய நம் உறவுகளான நம் தாத்தா, பாட்டி முதல் உடன்பிறப்புகள் வரையிலான உறவின் மகத்துவத்தை சில நிகழ்வுகள் மூலம் உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கோடை விடுமுறை துவங்கியதும், உடனடியாக நாம் செல்வது கிராமத்தில் இருக்கும் நம் தாத்தா, பாட்டியின் வீட்டிற்குதான். அவர்களுடன் கொஞ்சி உறவாடி, உணவை அன்புடன் அவர்கள் பரிமாற அதன் ருசி நம்மை அடுத்த விடுமுறை வரும்வரை நினைவில் வாழவைக்கும். கிராமத்தில் தாத்தா, பாட்டி மட்டுமல்ல, அங்கு இருக்கும் அனைவருமே உறவுகளாக அமைந்து விடுவர். தாத்தா, பாட்டி நம் வீட்டில் தங்கினால், அவர்களை மட்டும்தான் நமக்குத் தெரியவரும்.

ஆனால் நாம் அங்கு செல்லும் போது தான் ஊர் உறவுகள் அனைத்தும் அறிமுகமாகும். விடுமுறை முடிந்து, வீடு திரும்பினாலும், உறவுகள் மறையாது. மொத்தத்தில் கிராமமே ஒரு பெரிய குடும்பமாகவும், நிறைய அண்ணன்-தம்பிகள், அக்கா-தங்கைகள், பெரியப்பா-சித்தப்பா, அத்தை-மாமா, பாட்டி-தாத்தா என உறவு முறைகள்தான் அனைவருமே என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி நம்மை திக்குமுக்காடச் செய்யும். அத்தகைய உறவுகள்தான் நம் தலைமுறைகளுக்கு தொடர்பை ஏற்படுத்தும்.

மதுரம் தன் மகள் வீட்டுக்குச் சென்று திரும்பியிருந்தாள். ‘கொரோனா’ பாதித்தவர் தொடர்பில் இருந்ததால், தனிமையில் இருக்க நேர்ந்தது. அது அவளை பழைய உலகிற்கு எடுத்துச் சென்றது. 75 வயதான மதுரம் தன் சிறு வயதில் நிகழ்ந்த நினைவுகளை அசைப்போட்டாள். விடுமுறை யில் அம்மா, இவளையும் தம்பியையும் பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விடுவாள். இப்பொழுது மாதிரி கோச்சிங் கிளாஸ், யோகா கிளாஸ்னு எதுவும் கிடையாது. அத்தனை வகுப்பும் கூட்டுக் குடும்பங்களில் சொல்லிக் கொடுக்கப்படும். வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவார்கள்.

அது தன்னம்பிக்கையைர் கொடுக்கும். உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அது சந்தோஷம் தைரியத்தை ஏற்படுத்தும். அந்த சூழல் வாழ்க்கை முறையை கற்றுத்தந்தது. ஊர் முழுக்க உறவுகள் இருக்கும்போது, நமக்காக இத்தனை பேர் உள்ளார்களா என்கிற பெருமிதம் ஏற்படும். எந்த நிகழ்வுகளும் ஊரே அறியும்படி நடக்கும் என்பதால், தப்பு செய்யக்கூடிய சூழல் ஏற்படாது. காரணம், தப்பு செய்தால், தட்டிக் கேட்க ஆளுக்குப் பஞ்சமிருக்காது.

வருஷம் முழுக்க ஒவ்வொரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வது கோடை விடுமுறையில்தான். அந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நம்முடைய அம்மாக்களை குழந்தைகளாக பார்க்கலாம். பாட்டியின் மடியில் அம்மா தலை வைத்து படுத்திருக்கும் அந்தக் காட்சியினை அங்குதான் பார்க்க முடியும். அதுதான் ‘சொர்க்கமோ’ என்னுமளவுக்கு சந்தோஷம் வரும்! இப்பொழுது அதை நம் பிள்ளைகள் இழந்து வருகிறார்கள்.

விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டில் இருக்கும் ஒரு மாத காலம் நமக்கு பிடித்த உணவுகளை மட்டுமே பாட்டி சமைப்பார். பேரப்பிள்ளைகளை வரிசையாக அமர வைத்து ஊட்டி விடுவார். புத்திசாலியாக வளர வேண்டுமானால், பாட்டித் தருவதை சாப்பிட்டே ஆகவேண்டும். அதுதான் அதிகபட்ச நிபந்தனையாக இருக்கும். தினமும் மதிய உணவில் கீரை இருக்கும். அதுவும் தோட்டத்துக் கீரை. அதைப் பறிக்க ஆளாளுக்கு போட்டி நடக்கும். தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது கைகால்களை கழுவிக் கொண்டுதான் நுழைய வேண்டும். இவை அன்பான கண்டிப்புடன் செயல்படுத்தப்படும். செல்போன் கிடையாது, வீட்டு வாசலில்தான் விளையாட்டு.

வியர்த்தால் பாட்டியின் முந்தானைதான் கர்சீப். நீர்மோர், வீட்டில் தயாரிக்கப்படும் பழரசம் குடிக்கத் தருவார்கள். பிள்ளைகள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் அனைத்துமே பாட்டி தயார் செய்து வைத்திடுவார்கள். ஒருவருக்கொருவர் உதவுவதில் தாத்தா, பாட்டிகளை மிஞ்சவே முடியாது. தினமும் இரவு நிலாச் சோறுதான். பெரிய பாத்திரம் நிறைய சாதம். எல்லாப் பிள்ளைகளும் வரிசையில் அமர பாட்டி கையில் சாத உருண்டை பிடித்து தருவாள்.

அதில் யாருக்கு முதல் உருண்டை என்பதில் ஆரம்பித்த சண்டை இரவு தாத்தா- பாட்டி அருகே யார் படுக்கப் போகிறார்கள் என்பது வரை தொடரும். அந்த காலம் மின்சாரம் இருக்காது. அதனால் மாலை மொட்டைமாடி முழுவதும் தண்ணீர் ஊற்றி விடுவார்கள். இரவு ஜமக்காலம் விரித்து படுத்தால் போதும், குளுமையான காற்று இதமாக வரும். இயற்கையில் கிடைக்கும் மொட்டைமாடி காற்று கவலைகளை மறைக்கச் செய்து, தாலாட்ட வைக்கும்.

காலை எழுந்ததும் வீட்டிற்கு பின்னால் ஓடும் வாய்க்காலில்தான் குளியல். அதில் நீச்சலடித்து, ஒருவரை ஒருவர் முந்திச் செல்வது என சுவாரஸ்யமான போட்டிகளும் நடக்கும். நீச்சல் பயில இன்று நாம் கோச்சிங் செல்கிறோம். ஆனால் அன்று பாட்டி, தாத்தாதான் பயிற்சியாளராக இருந்தார்கள். எந்த வகுப்புகளுக்கும் பணம் கட்டி படித்தது கிடையாது. ஏன் கை வேலைப்பாடுகள் கூட வீட்டில்தான் சொல்லித் தருவார்கள். கோலம் போடுவது முதல் சுவரில் வண்ணம் தீட்டுவது, கூடை பின்னுவது என அனைத்தும் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். கலைகளை கற்பது மட்டுமில்லாமல்., பெரியவர்களுக்கு உதவுவது, அவர்களை மதிப்பது என அனைத்தும் கற்றுக் கொண்டார்கள்.

மதிய உணவு முடிந்ததும் பாட்டி ‘பல்லாங்குழி’யை எடுத்து வைப்பார்கள். எல்லோரும் சேர்ந்து பாடிக்கொண்டே புளியங்கொட்டையை எண்ணி அதன் குழியில் போடுவார்கள். ஆண் பிள்ளைகள் தெருவில் கிரிக்கெட், கில்லி போன்ற விளையாட்டை விளையாட சென்றிடுவார்கள். சிறிய வயது பெண்கள் பாண்டி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்களில்தான் அத்தனை உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் கிடைக்கும்.

மாலை விளையாட்டு முடிந்தால், அனைவரும் குளித்து இரவு நேர உணவிற்கு தயாராக வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும், நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்கள். இதுதான் பெரியவர்களின் வளர்ப்பு. அன்று ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு முதல் பத்து குழந்தைகள் கூட இருந்திருப்பார்கள். ஆனால் ‘மன உளைச்சல் என்றால் என்ன’ என்று யாருக்கும் தெரியாது. இன்று தனித்தனியாக வசிப்பது, சிறிய குடும்பங்களில் காணப்படும் பெரிய மன உளைச்சல்கள் உறவுகளின் உறுதுணையை நினைவூட்டுகின்றன.

(உறவுகள் தொடரும்!)

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள் மலர்ந்த நினைவுகள்… appeared first on Dinakaran.

Related Stories: