இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம்: 2ம் கட்ட வேட்பாளர்கள் வெளியிட வாய்ப்பு

புதுடெல்லி: இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம், அதன் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டியின் முதல் கூட்டம் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 8ம் தேதி அக்கட்சி 39 மக்களவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.

காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டியின் 2வது கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கிறது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவரான சோனியா காந்தி, வயநாடு எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், அரியானா, தமிழ்நாடு, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

The post இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம்: 2ம் கட்ட வேட்பாளர்கள் வெளியிட வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: