ஜல் ஜீவன் சக்தி அபியான் திட்டத்தில் கட்டிய 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் திடீர் விரிசல்

* பயன்பாட்டிற்கு வரும் நாளில் நீர் கசிவு

* சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வாய்விடாந் தாங்கல் கிராமத்தில் ஜல் ஜீவன் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி 2022- 2023ம் ஆண்டு ₹26.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் பணி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த தொட்டியில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். ஆனால் நிரப்பியவுடன் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பீய்ச்சியடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகள் அமைதியாக ஏதும் கூறாமல் சென்று விட்டனர்.
இதனை அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் வீடியோ எடுத்து அனைத்து வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவானது வைரலாக பரவியது.

இதுகுறித்து புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பிடிஓவிடம் கேட்டபோது, இந்த பணியானது முழுக்க முழுக்க பொறியாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ள பட்ட பணியாகும். இந்த பணியானது தரம் இல்லாமலும் அஜாக்கிரதையாலும் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post ஜல் ஜீவன் சக்தி அபியான் திட்டத்தில் கட்டிய 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் திடீர் விரிசல் appeared first on Dinakaran.

Related Stories: