சதுரகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோயிலுக்கு செல்ல விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை சென்று, அங்கு வனத்துறையினரின் அனுமதி பெற்று மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். இதுவே கோயிலுக்குச் செல்லும் பிரதான வழியாக உள்ளது.

இந்நிலையில், மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் (மார்ச் 8) 11ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இன்று பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர், மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணியளவில் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இரவு முழுவதும் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெறும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post சதுரகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: