காலனியாதிக்க எதிர்ப்பை கள ஆய்வு செய்த பேராசிரியர்…

நன்றி குங்குமம் தோழி

“வீரம் என்பது வரலாற்றுக்குறிப்பல்ல… விவேகம் என்பது புராணக் கதையல்ல…”தொழில்நுட்ப வளர்ச்சிகளும், போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் ஒருவர், 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரு வீரர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவர்களின் போராட்டங்களை, அவர்களது வீர வாழ்வை, ஆங்கிலேயர்களால் அவர்கள் தூக்கிலிடப்பட்ட நிகழ்வை தகுந்த ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கிறார்.

1988ம் வருடம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக மருது சகோதரர்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட முதல் ஆய்வு ஏடே அவரின் இந்த நூல். நூலின் ஆசிரியர் முனைவர் பேராசிரியர் கு.மங்கையர்கரசி, சென்னையில் உள்ள பிரபல கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்.நமக்குத் தகவல்கள் தேவையெனில் கூகுளைத் தட்டினால் விரல் நுனியில் அனைத்தும் கிடைக்கும். ஆனால் 1988 தகவல் தொடர்புகள் இல்லாத காலம். போக்குவரத்தும் குறைவுதான். இந்த நிலையில் ஒரு பெண் துணிந்து களத்திற்கே நேரடியாகச் சென்று, 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நிகழ்ந்த போருக்கான தகவல்களைத் திரட்டி, நூலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற ஆதாரங்களைச் சேகரித்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான்.

முனைவர் பட்டத்திற்கான இவரது ஆய்வு நூல் வடிவமும் பெற்றிருக்கிறது. முனைவரும் பேராசிரியருமான மங்கையர்கரசியிடம் பேசியதில்…

‘‘தமிழ் மொழி மீதிருந்த அதீதப் பற்றின் காரணமாய் தான் பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையை உதறிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு தமிழ் படிக்கச் சென்றவர் என் அப்பா. எனது அப்பாவின் வீடும் முன்னாள் முதல்வர் காமராஜரின் வீடும் அருகருகே என்பதால், காமராஜர், திரு.வி.க., ம.பொ.சி, இலக்குவனார், திருக்குறள் முனுசாமி, கி.சுத்தானந்த பாரதியார், வீரமணி, குமரி அனந்தன் போன்றவர்களின் நெருங்கிய நட்பில் அப்பா இருந்தார்.எங்கள் குடும்பமும் திராவிடக் கழக பாரம்பரியத்தை பின் தொடர்பவர்கள். எனவே எங்கள் குடும்பத்தில் பெண்களும் படித்து அரசுப் பணியில் உயர் பதவிகளில் இருந்தனர். நானும் மருத்துவம் படித்து, நைட்டிங்கேல் மாதிரி சேவை செய்யவே கனவு கண்டேன். ஆனால் அப்பா என்னை தமிழ் படித்து, முனைவர் பட்டம் வாங்க மடை மாற்றினார்.

பள்ளியில் படிக்கும்போதே தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக மேடை ஏறிப் பேசுவேன். சேலம் சாரதா கல்லூரியில் பி.ஏ. முடித்து, பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும்
எம்.பில். முடித்தேன். எம்.பில். படிக்கும்போது குமரி கண்டத்தை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு பேராசிரியர்கள் மூலமாக அமைந்தது. ஆராய்ச்சி படிப்பிற்காகவே வரலாறு, ஆந்தாலஜி மற்றும் ஓசோனோகிராஃபி பாடங்களைப் படித்தேன். பி.எச்.டி செய்ய முனைந்தபோது எனக்கு ஊர் சிவகங்கை மாவட்டம் என்பதால் மருது சகோதரர்களை களஆய்வு செய்ய சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எனக்கு கட்டளையிட்டார். அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அப்போது எனக்கு 22 வயதுதான். சிவகங்கை மாவட்டத்தில் எப்போதாவது ஒரு பேருந்து, எப்போதாவது ஒரு ரயில் என போக்குவரத்து அதிகம் இல்லாத நேரம் அது. எப்போது வரும் எனத் தெரியாமலே பேருந்துக்காகவும், ரயிலுக்காகவும் மணிக்கணக்கில் காத்திருப்பேன். இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு மைல் கணக்கில் நடந்தே சென்றிருக்கிறேன். அரண்மனை சிறுவயல், நரிக்குடி, முக்குளம், காளையார் கோயில், விருப்பாச்சி அரண்மனை, திருப்பத்தூர் கோட்டை, திண்டுக்கல் கோட்டை என மருது சகோதரர்கள் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் சென்றேன். அவர்களின் குடிவழிகளையும் சந்தித்து தகவல்களைச் சேகரித்தேன்.

சிவகங்கை மக்களின் செவிவழிச் செய்தி, சிவகங்கை கும்மி, அம்மாணை, நாட்டுப்புறப் பாடல்கள் வழியாகவும் தகவல்களைத் திரட்டினேன். செவிவழி கேட்பதும் சொல்வதும் மட்டும் நமக்கு உண்மையான தகவல்கள் கிடையாது. அவற்றுக்கான ஆதாரங்கள் வேண்டும்.சரியாக 8 ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சி இது. அத்தனை ஆண்டுகளுமே நான் ஒரு தவ வாழ்வை வாழ்ந்தேன் என்றே சொல்லுவேன். உறவினர் வீட்டு சுபகாரியங்களுக்கோ, சினிமாவுக்கோ, வேறு நிகழ்ச்சிகளிலோ நான் சென்று கலந்துகொள்ளவில்லை. நூலகம் அதை விட்டால் ஆவணக்காப்பகம் என மாறிமாறி தவம் கிடந்தேன். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணிவரை புத்தகங்களோடுதான் கிடப்பேன்.

குறிப்புகளை எடுத்துவிட்டு நான் வைக்கும் புத்தகங்கள் மறுநாள் சென்றாலும் அதே இடத்தில் அப்படியே இருக்கும்.சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகம் எனக்கு நிறைய ஆதாரங்களை தந்து உதவியது. பழைய ஆவணங்களை தேடி எடுக்கும்போது தூசியின் நெடி நாசிக்குள் ஏறும். தாள்கள் அனைத்தும் விரல்பட்டு நொறுங்கும் நிலையில் இருக்கும். ஆவணங்கள் பாதுகாக்கப்படாமலே இருந்த நேரம் அது. இப்போது நகல் எடுப்பது மாதிரி அப்போது நகலை பிரதி எடுக்க முடியாது. எல்லாவற்றையும் எழுதி எழுதிதான் காப்பி எடுக்க வேண்டும்.

ஆவணங்களுக்குள் நுழைந்து 17ம் நூற்றாண்டின் வரலாற்றைப் புரட்டி தூசி தட்டியதில், ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் லெப்டினென்ட் கர்னல் ஜேம்ஸ்வெல், கர்னல் அக்னியூ போன்றவர்களின் டைரி குறிப்புகள் புதையலைப் போல கிடைத்தன. சிவகங்கையின் வரலாற்றை அவர்கள் தங்கள் டைரியில் தேதி, மாதம், வருடங்களோடு பதிவுகளாக எழுதி வைத்திருந்தனர்.திருச்சி ஜம்புதீவு பிரகடனத்தில் இருந்து அனைத்தும் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்னல் ஜேம்ஸ்வெல் மருது பாண்டியர்களை தூக்கில் போட்டதை மிகவும் வருத்தத்துடன் தனது டைரியில் பதிவு செய்துள்ளார். மருது சகோதரர்களை தூக்கிலிட்ட நான்கு, ஐந்து தினங்களில் 600 பேரை ஒரே நாளில் தூக்கில் போட்டது இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய வன்முறை. அதன் பிறகு 1857ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது இந்த நிகழ்வு. மருது சகோதரர்களின் குடிவழியை மொத்தமாக அழிக்கச் செய்த செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் ஆங்கிலநடை புரிந்துகொள்வதற்கு அவ்வளவு எளிமையாக இருக்காது. படிப்பதற்கு மிகவும் கடினமானது. பத்திரிகை துறை சார்ந்த அப்பாவின் நண்பர் ஒருவர் அவர்களின் டைரிக் குறிப்பை மொழியாக்கம் செய்து வேகமாகச் சொல்லச் சொல்ல, கைகளால் நான் அதனைக் குறிப்பெடுப்பேன். கணினியும் கைபேசியும் அப்போது இல்லை என்பதால், கைகளால் எழுதி எழுதிதான் ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும்.

நான் எடுத்த குறிப்புகள் எல்லாவற்றையும் இப்போதும் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றைத் திருப்பிப் பார்த்தால் எப்படி இவற்றை எல்லாம் திரட்டினேன் என்பது எனக்கே ஆச்சரியத்தைத் தருகிறது’’ என்றவாறு பேராசிரியர் விடைபெற்றார்.பேராசிரியர் மங்கையர்கரசியின் வரலாற்று ஆய்வு நூலானது புள்ளி விவரக் குறிப்பாக இல்லாமல் ஒரு புதினத்தைப்போல, ஒரு வரலாற்றுத் திரைப்படத்தைக் காண்பதைப்போல அடுத்தடுத்து காட்சிப்படுத்தி அவர் இதனை எழுதியிருப்பதுதான் இந்த ஆய்வின் சிறப்பு.

திருவள்ளுவர் விருது…

ஓர் ஆய்வேட்டின் கட்டமைப்பும் அணுகுமுறையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரலாற்றை நேர்மையோடும் உண்மை உணர்வோடும் வெளிப்படுத்தியுள்ள பேராசிரியர் மங்கையர்கரசிக்கு 2003ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

விடுதலை வேட்கையின் பொருட்டு ஆங்கிலேயரை எதிர்த்தவர்கள்…

சிவகங்கை அரண்மனைக்குள் எளிய பணியில் நுழைந்து, ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படும்வரை போராட்டத்துக்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்தான் மருது
சகோதரர்கள். போராட்டம் வாழ்க்கையின் ஒருபகுதி என்பதன்றிப் போராட்டமே அவர்களின் வாழ்க்கையாயிற்று.சிவகங்கை பாளையம் மட்டுமின்றி, இந்தியாவிலிருந்தே ஆங்கில மேலாண்மையை முற்றிலும் அகற்றிட வேண்டும் என்கிற முனைப்பில் தங்களின் உயர்ந்த நோக்கத்திற்காக உருவானதே ஆங்கிலேயருக்கு எதிரான இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர். நாட்டை அடிமைப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டவர்களை எதிர்த்ததால் ஆங்கிலேயர் மருது சகோதரர்களை தங்களின் முக்கிய எதிரியாகக் கருதினர். 56 நாட்கள் ஆங்கிலேயருக்கு எதிராய் ஈடுகொடுத்து போரிட்ட மருது சகோதரர்கள் இறுதியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post காலனியாதிக்க எதிர்ப்பை கள ஆய்வு செய்த பேராசிரியர்… appeared first on Dinakaran.

Related Stories: