கணக்கு புரிந்தால் குரோஷேவில் சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

குரோஷேவில் ெபாழுதுபோக்கிற்காக பாட்டி மற்றும் அம்மாக்கள் வீட்டிற்கான அலங்காரப் பொருட்களை பின்னுவது வழக்கம். அதேபோல் கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்காக அழகான உடைகள், சாக்ஸ் போன்றவற்றை பின்னுவார்கள். குரோஷேவில் பொருட்களை செய்து விற்பனை செய்வது மட்டுமில்லாமல், அதனை எவ்வாறு பின்னுவது குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த சவுமியா வரதன். இவர் ‘யார்ன் வண்ட்ர்ஸ்’ என்ற பெயரில் பயிற்சி மையம் அமைத்து அதன் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறார்.

‘‘நான் பிறந்தது, படிச்சது எல்லாம் திருநெல்வேலியில். படிச்சு முடிச்சதும் வீட்டில் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. திருமணமான பிறகு சென்னைக்கு வந்துட்டேன். எங்க குடும்பத்தில் தலைமுறை தலைமுறையா சொந்தமா தொழில் செய்வதுதான் வழக்கம். அதனால்தான் என்னவோ எனக்கும் ஒருத்தரிடம் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படல. ெசாந்தமா தொழில் செய்ய விரும்பினேன். முதலில் யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிச்சேன்.

ஆனால் அது பெரிசா சக்சஸாகல. இப்படியே மூணு வருஷம் கடந்திடுச்சு. அப்பதான் எங்க சொந்தக்காரர் ஒருவர் குரோஷேவில் பொருட்கள் தயாரித்து வருவது தெரிய வந்தது. அது பார்க்க ரொம்பவே நல்லா இருந்தது. எனக்கும் அதை கத்துக்கணும்னு ஆசை ஏற்பட்டது. அவரிடம் கேட்ட போது அவருக்கு அதை எப்படி சொல்லித் தரணும்னு தெரியல. ஆனால் நான் சின்ன வயசில் என்னோட பாட்டி நிட்டிங் செய்றதைப் பார்த்து இருக்கேன். குரோஷே பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றாலும், இதுவும் ஒரு நிட்டிங் என்பது புரிந்தது. இதற்கான பயிற்சி யுடியூபில் இருக்கும்னு தேடிப் பார்த்தேன். அதில் நிறைய பேர் அவர்களின் ஸ்டைலில் பயிற்சி வீடியோவை போஸ்ட் செய்திருந்தாங்க.

அதைப் பார்த்துதான் நான் குரோஷே கற்றுக்கொண்டேன். ஆனால் நான் பார்த்த ஒவ்வொரு வீடியோவும் வேறு வேறு ஸ்டைலில் இருந்ததால், நான் அதை முழுமையாக புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டேன். அதன் பிறகு தான் புரிந்தது, இந்த தையலில் போடுவது ஒருவித கணக்கு என்று. என்னைப் போல் பலர் இது போன்ற வீடியோக்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இதனை எளிதாகவும், புரியும் வகையில் கொடுக்க விரும்பினேன். நான் கற்றுக் கொண்டது மற்றும் என் அனுபவங்களை வைத்து ஒரு பாடத்திட்டத்தினை அமைத்தேன். அதனைத் தொடர்ந்து 2015 முதல் பயிற்சியும் அளிக்க ஆரம்பிச்சேன்.

நான் இதை சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்ச போது, இதற்கான நூல் சென்னையில் எனக்கு கிடைக்கவில்லை. ஆன்லைனில் இருந்தாலும் அதன் விலை அதிகமா இருந்தது. அதனால் முதலில் நான் குரோஷே நூலைத் தேடி அலைந்தேன். அப்போது தான் தில்லி, பஞ்சாப்பில் இதற்கான நூல் மொத்த விலையில் கிடைப்பது குறித்து தெரிய வந்தது. அங்கு சென்று மொத்த விலையில் கொள்முதல் செய்ய ஆரம்பிச்சேன். அதன் பிறகு என் மாணவர்களுக்கு நானே நூல் மற்றும் ஊசி எல்லாம் கொடுத்து பயிற்சி அளிக்க துவங்கினேன்.

மேலும் என் யுடியூப் சேனலில் பயிற்சி குறித்தும் பதிவு செய்ய துவங்கினேன். அதைப் பார்த்து சென்னை மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பயிற்சி அளிக்க சொல்லி கேட்டாங்க. சென்னையில் நேரடியாகவும், வெளியூரில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் முறை பயிற்சியினை நான் கோவிட் காலத்திற்கு முன்பே துவங்கிட்டேன். கோவிட் போது, ரக்‌ஷாபந்தன் விழா வந்தது. அண்ணன்களுக்கு தங்கை ராக்கி கட்டும் விழா. வட இந்தியர்களின் மிகவும் முக்கியமான விழா.

ஊரடங்கினால் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததால், குரோஷேவில் ராக்கி சொல்லிக் கொடுப்பது குறித்து அறிவித்தேன். பலர் அதற்கான பயிற்சி மட்டுமில்லாமல் ஆர்டர் செய்தும் வாங்கினார்கள். அப்போதுதான் இந்தக் கலையினை கற்றுக்கொள்ள பலருக்கு விருப்பம் இருப்பது தெரியவந்தது. அதனை மனதில் கொண்டு என் பயிற்சியினை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினேன்’’ என்றவர், லாக்டவுன் முடிந்ததும் இதற்கான ஒரு பயிற்சி மையத்தை அமைத்துள்ளார்.

‘‘என்னதான் நான் வீட்டில் நேரடி பயிற்சி எடுத்தாலும், இதற்கான ஒரு தனிப்பட்ட பயிற்சி மையம் இருந்தால் தான் அதனை முறையாக நடத்த முடியும். அதற்காகவே நான் தனிப்பட்ட முறையில் பயிற்சி மையத்தினை அமைத்தேன். அதில் ஒரு பக்கம் பயிற்சியும் மறுபக்கம் நூல் விற்பனையும் செய்தேன். காரணம், என்னிடம் பயிற்சி பெற்றவர்கள், இதற்கான நூல் வெளியே கிடைப்பதில்லை என்றும், வண்ணங்களில் வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டார்கள்.

அவர்களுக்கு மட்டுமில்லாமல், இதனை தொழிலாக செய்பவர்களுக்காகவும்தான் நான் நூல் விற்பனையை துவங்கினேன். ஒரு பக்கம் பயிற்சி, மறுபக்கம் சமூக வலைத்தளத்தில் வரக்கூடிய ஆர்டர்களை செய்து வந்தாலும், இதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டேன். கல்லூரியில் நடைபெறும் விழா மற்றும் பெண்களுக்கான சுயதொழில் கண்காட்சியிலும் ஸ்டால் அமைக்க ஆரம்பித்தேன். அதில் குறைந்தபட்சம் 100 பேராவது எங்களின் பொருட்களை வாங்குவார்கள்.

மேலும் அதில் பங்கு பெறும் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் ஆர்டர்கள் வரத் தொடங்கியது. துணி நிறுவனங்கள் உடையில் டிசைன் செய்வதற்கு, அதாவது, ஒரு ரோஜா பூ அல்லது இதய வடிவ பேட்ச் வேலைப்பாட்டிற்கான ஆர்டர்களும் கொடுத்தார்கள். அதனை நான் ஒருத்தி மட்டுமே தயாரிக்க முடியாது என்பதால், பெண்களை வேலைக்கு நியமித்தேன். மேலும் என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு எங்களுக்கு வரும் ஆர்டர்களை அவர்கள் வீட்டில் இருந்தபடியே தயாரித்து கொடுக்க சொன்னேன். இதன் மூலம் என்னால் மற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது’’ என்றவர் இதில் அளிக்கப்படும் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘குரோஷேவில் மூன்றுவிதமான பயிற்சிகள் கொடுக்கிறேன். பொம்மை செய்வது, உடைகளை பின்னுவது, கடைசியாக கிரானி ஸ்கொயர். இதில் அவர்களுக்கு எது விருப்பம்னு முதலில் கேட்டு தெரிந்துகொள்வேன். ஒருவர் பொம்மை பின்ன கற்றுக்கொண்டால், அதில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் அவர்களுக்கு சொல்லித் தருவேன். அதனுடன் மற்ற இரண்டு குறித்து பயிற்சியும் அளிப்பேன். பொதுவாக மற்ற இடங்களில் ஒரு பத்து பொருட்களை எவ்வாறு பின்னுவது என்றுதான் சொல்லித் தருவார்கள். அவர்களுக்கு அதைத்தாண்டி மற்ற டிசைன்களை பின்னத் தெரியாது. இது ஒரு கலை. இதற்கு கிரியேட்டிவிட்டி மிகவும் அவசியம்.

அதனால் என்னிடம் பயிற்சி பெறுபவர்கள் அனைவரையும் எந்தப் பொருளை எப்படி பின்னலாம் என்று யோசிக்க செய்ய சொல்வேன். அதன் மூலம் அவர்கள் பல வித்தியாசமான பேட்டர்களை உருவாக்குவார்கள். அவர்களின் திறமையை தூண்டிவிட்டால் போதும், பல புதுமையான ஐடியாக்களுடன் வருவார்கள். எனக்கு இதை முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த தொழிலா மாற்றி அமைக்க வேண்டும்.

அதற்கு நான் இந்தியா மட்டுமில்லை உலகம் முழுக்க உள்ள குரோஷே, எம்பிராய்டரி மற்றும் நீடில் கலை தெரிந்தவர்களுக்கு என தனிப்பட்ட குழு அமைத்து, அதில் அவர்களை இணைத்தால், உலகளவில் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர முடியும். மேலும் உலகம் முழுதும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைக்க முடியும். இதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்.

எங்க ஏரியாவில் பல பெண்கள் என்னிடம் வேலை கேட்டு வருவார்கள். டிகிரி முடிச்சிருப்பார்கள், ஆனால், கம்யூனிகேஷன் ஸ்கில் இருக்காது. அதில் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகள். ஓய்வு பெற்றவர்களும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய விரும்புவார்கள். அவ்வாறு எங்களை நாடி வரும் பெண்களை முதலில் பயிற்சி எடுக்க சொல்வோம். அதன் பிறகு அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறோம்.

பொம்மை, உடைகள் மட்டுமில்லாமல், கீச்செயின், கம்மல், பேக், டைனிங் டேபிள் அலங்காரங்கள் என அனைத்தும் வடிவமைக்கிறோம். இதில் மிகவும் முக்கியமானது அதில் பயன்படுத்தப்படும் நூல்கள்தான். ஒவ்வொரு நூலின் தடிமனுக்கு தயாரிக்கப்படும் பொருட்கள் மாறுபடும். அப்போதுதான் அது உறுதியாக இருக்கும். துவைத்து பயன்படுத்தக்கூடியது என்பதால், நூலின் தரமும் நன்றாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நூல் பிரிந்துவிடும், சாயம் போகவும் வாய்ப்புள்ளது’’ என்றார் சவுமியா.

The post கணக்கு புரிந்தால் குரோஷேவில் சம்பாதிக்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: