வெளிநாடுகளில் இருந்து குஜராத், ராஜஸ்தான் வழியாக கடத்தல்: போதை பொருட்களின் சுரங்கமாக விளங்கும் வடமாநிலங்கள்; அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்

* சிறப்பு செய்தி
உலகில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில காலமாகவே போதைப் பொருள் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு முறைகேடான வழிகளில் போதைப் பொருளை இந்தியாவுக்குள் எடுத்து வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி இருப்பதுதான். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தல் கும்பல் ஆன்லைன் மற்றும் கடல் மார்க்கத்தில் போதை பொருள் கடத்தலை விரிவுபடுத்தியிருப்பதால் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருட்கள் பறிமுதல் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017 முதல் 2022 வரையான காலகட்டத்தில் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் 2,146 கிலோவில் இருந்து 7,282 கிலோவாக அதிகரித்துள்ளது. அபின் கடத்தலும் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த 2017ல் 2,551 கிலோவாக இருந்தது, 2021ல் 4,386 கிலோவாக அதிகரித்துள்ளது. 2017ல் 3,52,539 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது 2021ல் 6,75,631 கிலோவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கன்டெய்னர்கள் மூலம் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. போதை பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கத்தையே பயன்படுத்தும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2021 செப்டம்பர் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்து 3 டன் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் அரபி கடல் வழியே போதை கடத்தல் அதிகரித்துள்ளது உறுதிபடுத்தப்பட்டது.
அதே ஆண்டில் ஆசிய நாடுகளில் இந்தியாவில் இருந்து மட்டும் 364 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் சராசரியாக 40 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச அளவில் போதை மாத்திரை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மெத்தாம்பேட்டமைன் மற்றும் கேட்டமைன் போதை மாத்திரைகளின் உற்பத்தி மற்றும் கடத்தலும் அதிகரித்துள்ளது. போதை பொருள் கடத்தலை பொறுத்தவரை ஆப்கன் போன்ற வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. ஆப்கனில் இருந்து ஈரான் மற்றும் பாகிஸ்தான் வழியாக உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து பயணப்படும் போது ஒரு கிலோ ஹெராயின் விலை ரூ.10,000 என்றால், அது பல இடங்களுக்கு கைமாறி மும்பையை அடையும்போது அதன் விலை ரூ.50 லட்சம். நியூயார்க்கை அடையும்போது விலை ரூ.1 கோடியாக இருக்குமாம். அந்த வகையில் போதைப்பொருள் கடத்தல் என்பது பல கோடிகள் புழங்கும் வியாபாரமாக உள்ளது. ஒரு சில நாடுகள் போதை பொருள் உற்பத்தியை பெருக்கி வருகிறது என்றால் இந்தியா போதைப் பொருள்கள் நுகர்வில் மிகப் பெரும் சந்தையாக திகழ்வதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரை போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கைதாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன. போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது மிகப் பெரிய வலைப் பின்னலாக செயல்படுகிறது. உலகில் பயன்படுத்தப்படும் அபின், ஹெராயின் போன்ற ஓப்பியாய்டு வகை போதைப் பொருள்களின் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் 83 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பு வரை அவர்களுக்கான முதன்மை நிதி ஆதாரம் போதைப்பொருள்கள் ஏற்றுமதி தான். ஓப்பியாய்டு நுகர்வில் உலக சராசரி 0.7 சதவீதம்.

ஆனால், இந்தியாவில் ஒப்பியாய்டு நுகர்வு 2.06 சதவீதமாக உள்ளது. இதில் கூடுதலாக கவனிக்கத்தக்க விஷயம் போதைப்பொருள் நுகர்வில் மட்டுமல்ல, கைமாற்றிவிடும் இடமாகவும், விநியோக மையமாகவும் இந்தியா உள்ளது என்பது தான். ஓப்பியாய்டு வகை போதைப் பொருட்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லை வழியாகவும், கஞ்சா வகை போதைப் பொருட்கள் இந்தியா – நேபாளம் எல்லை வழியாகவும் ஏடிஎஸ் வகை போதைப் பொருட்கள் இந்தியா – மியான்மர் எல்லை வழியாகவும் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் முறைகேடான போதைப் பொருட்கள் சந்தையின் மதிப்பு ரூ.30,000 கோடிக்கு மேல் என்று அனுமானிக்கப்படுகிறது.

கடந்த 2021ல் குஜராத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் 3.2 டன் அளவில் ஆப்கான் ஹெராயின் பிடிபட்டது. அதன் மதிப்பு ரூ.21,000 கோடியாகும். இப்படி எத்தனை முறை இந்த துறைமுகம் வழியாக இந்தியாவுக்குள் போதை பொருள் கடத்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை எதிர்கட்சிகள் அப்போது எழுப்பியது குறிப்பிடத்தக்கது. அதாவது, அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருட்களைப் பார்த்து ஒன்றிய அரசும் குஜராத் மாநில அரசும் எப்படி கண்ணை மூடிக்கொண்டன? என்ற கேள்வியை அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பியது. குஜராத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் தெரிவித்தனர்.

உலக நாடுகளுக்கு, மூன்று வழித்தடங்கள் வழியாகத் தான், ஹெராயின் கடத்தப்படுகிறது. மத்திய ஆசிய நாடுகளில் இருந்து ரஷ்யா வழி, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஈரான் வழி, இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழியாக, ஹெராயின் கடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வடமாநிலங்கள் வழியாகத் தான் போதை பொருள் கடத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் எல்லை, வட கிழக்கு மாநிலங்களான மிசோரம் மற்றும் மணிப்பூர் வழியாக, ஹெராயின் கடத்தி வரப்படுகிறது.

இப்படி வடமாநிலங்கள் பல இந்தியாவின் போதை பொருள் கடத்தலின் சுரங்கமாக விளங்குவதாக உறுதியான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் போதை பொருட்கள் ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர், அரியானா, பீகார், உத்தரபிரதேசம், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக தான் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புள்ளி விபரங்கள்
கூறுகின்றன. இவற்றில் பெரும்பாலான மாநிலங்கள் பாஜ ஆளும் மாநிலங்களாகவே இருக்கிறது.

ஏற்கனவே, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்துக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு அடிக்கடி போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்றும், இதுபோன்ற கடத்தலின் போது கண்துடைப்புக்காக ஒரு சில கடத்தல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வெளி உலகத்துக்கு தெரிய வைப்பதும் வாடிக்கையாக உள்ளதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளால் இந்தியாவின் போதைப் பொருள் கடத்தல் கேந்திரமாக குஜராத்தின் உள்ள முந்த்ரா துறைமுகம் மாறி உள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இப்படி இந்தியாவுக்குள் வரும் போதை பொருட்கள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், இலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் நிர்வாக திறமையின்மையால் பொது நிறுவனங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதால் இதுபோன்ற கடத்தல்கள் அரங்கேறி வருவதாகவும் எதிர்க்ட்சிகள் குற்றசாட்டை முன்வைத்துள்ளன. அதன் அடிப்படையில் இந்தியாவின் போதை பொருள் கடத்தலின் தலைநகரமாக குஜராத் மாநிலம் விளங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஓராண்டில், 35 ஆயிரம் கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருள், சட்ட விரோதமாக, போதை பிரியர்களால் நுகரப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மிகவும் கொடிய அந்த போதைக்கு, இளைஞர்கள் ஆளாகாமல் தடுக்கவும், போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்தவும் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

* உலகிலேயே அதிகளவு பறிமுதல்
இந்தியாவில் 2020 முதல் 2022 வரை போதை பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்ததில் முதல் 3 மாநிலங்கள் பட்டியலில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, 2021-22 ஒன்றிய வருவாய் உளவுத்துறை அறிக்கையின் படி, குஜராத் முந்த்ரா(அதானி) துறைமுகத்தில் உலகிலேயே அதிக அளவாக 2889 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21,000 கோடியாகும்.

* 3 லட்சம் கிலோ அபின் பறிமுதல்
இந்தியாவில் 2020 முதல் 2022 வரை பறிமுதல் செய்யப்பட்ட அபின் என்ற போதை பொருளின் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி, 2020ல் 2,19,287 கிலோவும், 2021ல் 2,47,640 கிலோவும், 2022ல் 3,21,142 கிலோ அபினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அபின் பறிமுதலில் 4வது நாடு இந்தியா
இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலால் மில்லியன் கணக்கான மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு பாதிக்கிறது. உலக மருந்து அறிக்கை 2022ன் படி, 2020ல் 5.2 டன் அபின் கைப்பற்றப்பட்ட 4வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மேலும் 3வது அதிக அளவு மார்பின் அதே ஆண்டில் 0.7 டன் கைப்பற்றப்பட்டது. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலக புள்ளி விபரத்தின்படி, 2019ல் உலகளாவிய அபின் பறிமுதல்களில் 7 சதவீதமும், உலகளாவிய ஹெராயின் பறிமுதல்களில் 2 சதவீதமும் இந்தியாவில் உள்ளது.

* ஆண்டு வர்த்தக மதிப்பு ரூ.36 லட்சம் கோடி
உலகில் 90 சதவீதம் ஹெராயினை ஆப்கானிஸ்தான் உற்பத்தி செய்கிறது. இங்கிருந்து கஜகஸ்தான், துருக்கிக்கு கடத்தப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது. அங்கிருந்து கிரீஸ் நாட்டின் மெர்ஸிலிஸ் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுகிறது. உலகம் முழுவதும் நடக்கும் போதை கடத்தலுக்கு சில உதாரணங்கள் தான் இவை. போதைப் பொருள் வர்த்தகம் இந்தியா வழியாகவும் நடக்கிறது. இப்படி, உலகம் முழுதும் மூலப்பொருட்களை பயிரிடுதலில் தொடங்கி, வளர்ப்பு, விளைச்சல், உற்பத்தி, ஏற்றுமதி என பல கட்டங்களாக நடக்கும் போதை பொருட்களின் ஆண்டு வர்த்தக மதிப்பு ரூ.36 லட்சம் கோடி என ஐ.நா ஆய்வறிக்கை கூறுகிறது.

டாப் 10
மாநிலங்கள்
மாநிலங்கள் அளவு(கிலோ)
1. ராஜஸ்தான் 1,46,880
2.பஞ்சாப் 46,502
3.மத்தியபிரதேசம் 32,589
4.ஜார்கண்ட் 32,376
5.மணிப்பூர் 17.149
6.குஜராத் 12,838
7.அரியானா 11,195
8.பீகார் 7358
9.மேற்கு வங்கம் 5446
10.உத்தரபிரதேசம் 4528
இந்த பட்டியலில் தமிழ்நாடு 20வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வெளிநாடுகளில் இருந்து குஜராத், ராஜஸ்தான் வழியாக கடத்தல்: போதை பொருட்களின் சுரங்கமாக விளங்கும் வடமாநிலங்கள்; அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: