மணப்பெண்கள் விரும்பும் டெரக்கோட்டா நகைகள்!

நன்றி குங்குமம் தோழி

டெரக்கோட்டா நகைகள் என்றால் முதலில் நியாபகம் வருவது நாம் விரும்பும் வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளலாம் என்பதுதான். தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடைகளில் கூட இப்படி கண்கவர் நிறங்களில் டிசைன்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் டெரக்கோட்டா நகைகளில் நம்முடைய உடைக்கு ஏற்ப மேட்சிங் நகைகளை நாம் விருப்பம் போல் வடிவமைத்துக் கொள்ளலாம். இது உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

மேலும் தங்கம் இப்போது விற்கும் விலைக்கு பெண்கள் இதனையே அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். காரணம், ஒவ்வொரு உடைக்கு ஏற்ப வித்தியாசமான நகைகளை அணிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட டெரக்கோட்டா நகைகளை வடிவமைத்து தனக்கென்று ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் கவியரசி.

இவரின் ‘கயல்ஸ் க்ரியேஷன்’, பலவித டெரக்கோட்டா நகைகளின் சங்கமம். டெரக்கோட்டா நகைகள் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் மற்றும் இதனை தொழிலாக நடத்துவதற்கான காரணத்தை விளக்குகிறார்.‘‘+2 முடிச்சதும் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனால் நானோ ஆசிரியருக்கான பயிற்சியினை தேர்வு செய்தேன். காரணம், ஆசிரியர் வேலையில் எந்தவித சிக்கலும் ஏற்படாதுன்னு எங்க வீட்டில் நம்பினாங்க. ஆனால் நான் படிச்சு முடிச்சதும் திருமணமானது. எங்களின் முதல் குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட். அவங்களையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்க முடியாதுன்னு நிறைய பேர் அட்வைஸ் செய்தாங்க. ஆனால் குழந்தை, குடும்பம் மட்டுமல்லாது ஒரு தொழிலையும் என்னால் நிர்வகிக்க முடியும் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கதான் நான் இந்த தொழிலே துவங்கினேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன் டெரக்கோட்டா நகைகளை எங்காவது ஒரு சிலர் மட்டும்தான் செய்து வந்தாங்க. அவர்கள் செய்வதில் 98% ஒரே மாதிரியான டிசைன்களாகத்தான் இருக்கும். எனக்கு தங்க நகைகளை விட டெரக்கோட்டா நகைகள் அணிந்துகொள்ள பிடிக்கும். என் தோழிகளும் இந்த நகைகளை வீட்டில் இருந்தபடியே செய்து வந்தாங்க. அவர்களிடம் வாங்கி நான் பயன்படுத்துவேன். அப்போதுதான் மற்றவர்களிடம் இருந்து வாங்குவதற்கு பதில் எனக்கான டிசைன்களை நானே ஏன் வடிவமைக்கக்கூடாதுன்னு யோசனை வந்தது. வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான நேரம் ஒதுக்கினாலும், சும்மா இருக்கும் நேரங்களில் பொழுதுபோக்கிற்காக இந்த நகைகளை செய்யலாம் என்றுதான் இதை செய்ய துவங்கினேன். அது எனக்குள் ஒரு திருப்தியை கொடுத்தது. முதலில் நான் எனக்காகத்தான் செய்யத் துவங்கினேன்.

அதைப் பார்த்து என் மற்ற நண்பர்களும் கேட்க ஆரம்பிக்கவும், அவர்களுக்குத் தேவையான நிறம் மற்றும் டிசைன்களில் செய்து கொடுத்தேன். இதற்கென தனிப்பட்ட பயிற்சிக்கு எல்லாம் நான் போனதில்லை. யுடியூப்பில் வரும் வீடியோக்களை பார்த்து, நானாகவே கற்றுக்கொண்டேன். மேலும் பள்ளியில் படிக்கும் போது, அறிவியல் கண்காட்சிக்காக, களிமண்ணில் பிராஜக்டுகள் எல்லாம் செய்திருக்கேன். அப்போதிலிருந்தே எனக்கு களிமண் பொருட்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. மேலும், என் வீட்டுச் சூழல் காரணமாக என்னால் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

பள்ளிக்கு சென்று பாடம் நடத்தினால்தான் ஆசிரியராக முடியுமா என்ன?

வீட்டில் இருந்தபடியே நமக்குத் தெரிந்த கலையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் ஒருவிதத்தில் ஆசிரியர் வேலை போல தானே. மேலும் என்னைப்போல் படிச்சிருந்தும் வேலைக்குப் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக இருக்கும். அதன் அடிப்படையில்தான் நான் நகைகளை வடிவமைப்பது மட்டுமில்லாமல் அதற்கான பயிற்சியும் அளிக்க ஆரம்பித்தேன்’’ என்றவர், தன் டெரக்கோட்டா ெதாழிலுக்கு தன்னுடைய மகளின் பெயரையே வைத்துள்ளார்.

டெரக்கோட்டா நகைகளை பலர் வடிவமைக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் உங்களின் டிசைன்களில் அப்படி என்ன ஸ்பெஷல் உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்தார் கவியரசி. ‘‘பொதுவாக டெரக்கோட்டா நகைகள் என்றால் சிம்பிள் டிசைன்கள்தான் இருக்கும். உதாரணத்திற்கு டாலர் செயின், நெக்லஸ் அல்லது சிம்பிளான டிசைன் கொண்ட செயின். இதனை கல்லூரி மாணவிகள்தான் அதிகம் விரும்புவார்கள்.

மற்றவர்கள் போல் இல்லாமல் வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக மணப்பெண்களுக்கான நகைகளை முதன் முதலில் நாங்கதான் வடிவமைக்க ஆரம்பித்தோம். ஒரு மணப்பெண்ணுக்குத் தேவையான நெற்றிச்சுட்டி முதல் காலில் போடும் கொலுசு வரை அனைத்தையும் தயாரித்து தருகிறோம். இதில் டெம்பிள் கலெக்‌ஷனும் எங்களிடம் அதிகமாக விற்கப்படும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் எங்களின் நகைகளை வாங்க ஆரம்பித்தாங்க. குறிப்பாக மேக்கப் துறையில் உள்ளவர்கள்தான் எங்க நகைகளை அதிகம் விரும்பினாங்க.

காரணம், பல ஆயிரங்களை கொடுத்து நகைகளை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து திருமணத்திற்காக அணிவதை விட, அதே பணத்திற்கு டெரக்கோட்டா நகைகளை வாங்கிவிட்டால், நாம் சொந்தமாக உபயோகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையில் சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் களிமண் நகைகள் எப்படி திருமணத்திற்கு பொருந்தும். அதற்கு தங்க நகைகள் அல்லது கவரிங் நகைகளை பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவார்கள்.

ஆனால் டெரக்கோட்டா நகைகளை விரும்புபவர்கள், புரிந்தவர்கள் மற்றும் ரசிப்பவர்களால்தான் இதனை பயன்படுத்த முடியும். மேலும் நம் உடைக்கு ஏற்ப நாம் இதனை வடிவமைத்துக்கொள்ளலாம். ஆனால் மற்ற நகைகள் எல்லாம் ரெடிமேட்டாகத்தான் கிடைக்கும். மணமக்களின் நகையினை தொடர்ந்து நம்முடைய அடுத்த எக்ஸ்குளூசிவ் கலெக்‌ஷன் டெம்பில் நகைகள். இதில் நாங்க பதிக்கும் கற்கள் அனைத்தும் தரமான ஒரிஜினல் கற்கள். அதனால் பார்க்கும் போது நேர்த்தியாக இருக்கும்’’ என்றவர் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறார்.

‘‘கல்லூரி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பலர் எங்களின் வாடிக்கையாளர்கள். ஒரு சிலர் தங்க நகையில் இருக்கும் டிசைன்களை இதில் செய்து தரச்சொல்லி கேட்பார்கள். அதேபோல் 93% எங்களால் வடிவமைத்து தரமுடியும். இந்த நகைகளை அவ்வளவு எளிதாக வடிவமைக்க முடியாது. ஒரு சாதாரண கம்மல் அல்லது சோக்கர் தயாரிக்க மூன்று நாட்களாகும். பிரைடல் நகைகள் வடிவமைக்க ஒரு வாரமாகும்.

சில சமயம் நகைகளை சுடும் போது உடைந்து போகும். அல்லது பினிஷிங் சரியாக வந்திருக்காது. அதை மீண்டும் செய்ய வேண்டும். எங்களிடம் சாதாரண தோடு ரூ.50ல் துவங்கி பிரைடல், டெம்பிள் செட் 8 ஆயிரம் வரை இருக்கு. இங்கு ஐந்து முதல் எட்டுப் பெண்கள் இரண்டு குழுவா வேலை செய்றாங்க. ஒரு குழு மண்ணை கொண்டு நகைகளை உருவாக்குவாங்க. மற்ற குழு கற்களைப் பதிப்பது, நகைகளுக்கு பெயின்ட் செய்யும் வேலையை பார்த்துக்கொள்வாங்க. என்னால் எல்லா நேரத்திலும் இவர்களுடன் இருக்க முடியாது என்பதால், இவர்களில் ஒருவருக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்திடுவேன். அவர் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார். அதன் பிறகு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு டிசைன்களையும் உருவாக்குவார்கள். ஒவ்வொரு நகைகளும் கைகளால்தான் வடிவமைக்கிறோம். சில டிசைன்களுக்கு மட்டும் மோல்டுகளை பயன்படுத்துகிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு நகையும் வாடிக்கையாளர்களின் கைக்கு சேரும் வரை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்வது எங்களின் பொறுப்பு. சில சமயம் கொரியர் அனுப்பும் போது உடைந்திடும். அதனால் முடிந்தவரை பொறுமையாக கையாள சொல்லியிருப்போம். மேலும் வாடிக்கையாளர்கள் கையில் நகை சேர்ந்தவுடன் அதை அன்பாக்ஸ் செய்து எங்களுக்கு வீடியோ பதிவு செய்யச் சொல்வோம். அதில் உடைந்திருந்தால், அதே டிசைனில் வேறு நகையோ அல்லது அவர்களின் பணத்தை திருப்பி கொடுத்திடுவோம். வாடிக்கையாளர்களின் திருப்திதான் எங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும்’’ என்று, தன் பயணத்தினை பகிர்ந்து கொண்டார் கவியரசி.

The post மணப்பெண்கள் விரும்பும் டெரக்கோட்டா நகைகள்! appeared first on Dinakaran.

Related Stories: