அவமானங்கள்தான் தலைநிமிர வைத்துள்ளது!

நன்றி குங்குமம் தோழி

‘‘என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அதில் நான் மட்டும்தான் தனியாக இருந்தேன். காரணம், என் உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றம்’’ என்று பேச ஆரம்பித்தார் திருநங்கை திவ்யா. ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஐந்து அண்ணன், தம்பிகளுடன் பிறந்தவர். நாளடைவில் இவர் திருநங்கையாக மாறியதும், திருப்பூருக்கு சென்றவர், அங்கு சிறுதானியத்தில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து, தொழில் முனைவோராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் ‘மகராசி இனிப்பு’ மூலம் பல திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

‘‘ஐவரில் நான் மட்டும் திருநங்கையாக மாறிய பொழுது, என் அம்மா என்னை திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிட்டுட்டாங்க. அதன் பிறகு திருப்பூரே என் ஊராக மாறிவிட்டது. இன்றுவரை நான் அங்குதான் வசித்து வருகிறேன். நான் சிறுதானிய தொழிலை ஆரம்பித்ததும் இங்குதான். நாங்க முழுக்க முழுக்க சிறுதானியங்கள் கொண்டு தான் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறோம். நான் இந்தத் தொழிலுக்கு வரும் முன் பனியன் நிறுவனத்தில்தான் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் என் நிலை குறித்து கிண்டல் செய்தனர். என்னை ஏளனமாக பேசினார்கள்.

சிலர் என்னை உதாசீனம் செய்தும் மரியாதைக் குறைவாகவும் நடத்தினார்கள். அவர்கள் சொல் பேச்சை நான் கேட்கவில்லை என்றால் என்னைப் பற்றி தவறாக முதலாளியிடம் கூறுவார்கள். அவரும் அவர்கள் சொல்வது உண்மை என்று நினைத்து என்னை திட்டுவார். ஒவ்வொரு நாளும் எனக்கு அங்கு இருப்பது நரக வேதனையாக இருந்தது. வீட்டிற்கும் செல்ல முடியாமல், இங்கு வேலையும் பார்க்க முடியாமல் நான் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவமானங்களுடன் வேலை பார்க்க முடியாது என்று புரிந்துகொண்ேடன். அதனால் அங்கிருந்து வெளியேறினேன்.

வேலை இல்லை, கையில் காசும் இல்லை. ஆனால் நான் வாழ்ந்தாக வேண்டுமே. அதனால் சின்னச் சின்ன வேலைகளை செய்து வந்தேன். மேலும் சமூகம் எங்களை நிராகரித்தாலும், நாங்க அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்கள் தங்களின் வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு எங்களை அழைத்து வாழ்த்துப் பெறுவார்கள். குறிப்பாக திருமண வீட்டில் மாப்பிள்ளை- பெண்ணையும் ஆசீர்வதிக்க அழைப்பார்கள்.

ஒரு பெண் பூப்படைந்துவிட்டால் அந்தப்பெண்ணிற்கு தீட்டு கழிக்க எங்களைதான் வரச்சொல்வார்கள். சிலர் பிறந்த குழந்தை முதல் முறையாக வீட்டிற்கு வரும் போது ஆசீர்வதிக்க சொல்வார்கள். இதற்கு பணம் வைத்துக் கொடுப்பார்கள். ஆனால் இது போன்ற விசேஷங்கள் தினமும் இருக்காது. அதனால் சில சமயம் சாப்பாட்டிற்கே கஷ்டமாக இருக்கும். அந்த நேரத்தில் வேறு வழி இல்லாமல் யாசகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றவர், சிறுதானிய வகைகளைக் கொண்டு உணவுப் பொருட்களை தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்ட காரணத்தைப் பற்றி விவரித்தார்.

‘‘எந்த ஊருக்கு சென்றாலும் ஏன் வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் எங்களுக்கான தனிப்பட்ட சமுதாயம் உண்டு. நான் வேலையை விட்டு வந்த பிறகு திருநங்கை சமுதாயத்தில் இணைந்தேன். எங்களில் பலர் நல்ல நிலையில் இருந்தாலும், சமூகத்தில் எங்களுக்கான அங்கீகாரம் இன்றும் கிடைக்கவில்லை. அனைத்தையும் நாங்க போராடிதான் பெற்று வருகிறோம்.
வீட்டில் உள்ளவர்களால் ஏற்கப்பட்டு, நல்ல கல்வி பெற்றவர்கள், தங்களுக்கு என ஒரு வேலையினை தேடிக்கொள்கிறார்கள்.

திறமை இருந்தால் எங்களுக்கும் நிறுவனங்கள் வேலை கொடுக்க தயாராக உள்ளனர். நல்ல வேலை இருந்தால், கண்டிப்பாக எங்களின் வாழ்வாதாரமும் உயரும். நான் திருநங்கையாக மாறிய பிறகு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில் வாழ்வாதாரமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. வாழ்நாள் முழுக்க கையேந்த முடியாது என்று முடிவு செய்தேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், தின்பண்டங்கள் செய்து விற்பனை செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

முறுக்கு, அதிரசம் எல்லாம் எங்க குழுவினரோடு இணைந்து தயாரித்தோம். முதலில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ருசி பார்க்க கொடுத்தோம். அவர்களும் நன்றாக இருக்கு என்று சொல்ல இதையே தொழிலாக செய்ய திட்டமிட்டோம். முறுக்கு, அதிரசம் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அதில் வித்தியாசப்படுத்திக் கொடுக்க விரும்பினோம். அந்த சமயத்தில்தான் நபார்டு வங்கி சிறுதானிய தின்பண்டங்கள் குறித்த பயிற்சி முகாம் நடத்தியது. என்னுடன் சேர்ந்து பத்து பேர் மூன்று மாதக் காலம் முறையாக பயிற்சி பெற்றோம். அதன் பிறகுதான் இதனை துவங்கினோம். முதல் ஆறு மாதக் காலம் பல இன்னல்களை சந்தித்தோம். அது எங்களுக்கு ஒரு தொழிலை எவ்வாறு செய்யலாம் என்ற அனுபவத்தைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நபார்டு வங்கிக் கடன் கொடுக்க முன்வந்தது. அதைக் கொண்டுதான் நாங்க தொழில் துவங்கினோம்.

நாங்க வீட்டில் இருந்தபடி ஆர்டரின் பேரில் தயாரிக்கிறோம். எங்களின் தின்பண்டங்களுக்காக ஒரு தனிப்பட்ட கடை வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு வங்கி உதவி செய்ய முன்வந்தாலும், எங்களை நம்பி வாடகைக்கு யாரும் கடையை தர முன்வரவில்லை. சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ நினைத்தாலும், எங்களால் முடியவில்லை. வியாபாரம் செய்ய ஒரு நிரந்த இடம் இல்லை என்பதால், திருப்பூர் மாவட்டங்களில் நாள்தோறும் நடக்கும் சந்தையில் வியாபாரம் செய்கிறோம். திருப்பூர் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் நடக்கும் சந்தைகளில் வியாபாரம் செய்யும் இடம் கிடைத்தால், அங்கு சென்றும் எங்களின் தின்பண்டங்களை விற்பனை செய்கிறோம். திருநங்கைகளாக நாங்க 10 பேர் இணைந்துதான் இந்தத் தொழிலை செய்து வருகிறோம்’’ என்றவர், தங்களுக்கு என ஒரு கடை அமைப்பதற்காக அரசாங்கத்திடம் மனு செலுத்தியுள்ளார்.

‘‘ஒரு காலத்தில் அவமானம் மட்டுமே நான் சந்தித்து வந்தேன். அதை பாடமாக எடுத்துக்கொண்டு சொந்த உழைப்பில் மானம், மரியாதையோடு வாழ வேண்டும் என்று சபதம் எடுத்தேன். அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன். திருப்பூர் மாவட்டத்தில் மகராசி இனிப்பகம் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இங்குள்ள அலுவலகத்தில் எந்த ஒரு விழாக்கள் நடந்தாலும் எங்களை அழைத்து ஸ்டால் போடச் சொல்கிறார்கள். பெண்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்கு என்னை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்கள். அது
குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சொல்கிறார்கள். எங்க சமூகத்திற்கு நான் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

நாங்க நேரடி வியாபாரம் மட்டும்தான் செய்து வருகிறோம். ஆர்டரின் பேரில் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்கிறோம். தினை அதிரசம், கம்பு அதிரசம், ராகி அதிரசம், தினை லட்டு, ராகி லட்டு, கம்பு லட்டு, நாட்டுச் சர்க்கரை ரவா லட்டு, கம்பு முறுக்கு, தினை முறுக்கு, ராகி முறுக்கு, கைக்குத்தல் எள்ளு உருண்டை… இப்படியாக பல சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரிக்கிறோம். நபார்டு வங்கி, தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் எங்கள் மேல் அக்கறை கொண்டுள்ளவர்கள்தான் எங்களுக்கு நிதி உதவி அளித்தார்கள். அவர்களின் உதவியால்தான் எங்களால் தொழிலில் சாதிக்க முடிந்தது. நாங்களும் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருகிறோம்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார் திவ்யா.

தொகுப்பு: திலகவதி

The post அவமானங்கள்தான் தலைநிமிர வைத்துள்ளது! appeared first on Dinakaran.

Related Stories: