நீதிபதியான பழங்குடிப் பெண்

நன்றி குங்குமம் தோழி

முதல் தேர்விலேயே தேர்ச்சி அடைந்து நாட்டின் உச்சபட்ச பதவியான நீதித்துறையில் நீதிபதியாக அமர்ந்திருக்கிறார் ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் பெரும்பாலும் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. முக்கியமாக பள்ளி இயங்கினாலும் அங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும். இதே பிரச்னை இவர் வசிக்கும் ஜவ்வாது மலையில், புலியூர் பகுதியிலுள்ள பள்ளியில் இருந்தது. மேலும், அந்தப் பள்ளியில் கழிவறை வசதிகளும் கிடையாது. அப்படி இருந்தும் அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் கடும் சிரமங்களுடன்தான் படித்து வருகின்றனர். நடுநிலைப் பள்ளி வரை இருந்தாலும் அங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதே சூழ்நிலைதான் பல பழங்குடி கிராமங்களில் நிலவுகிறது. பொதுவாக பழங்குடி கிராமங்களில் உண்டு உறைவிட பள்ளிகள்தான் இருக்கும். காரணம், இவர்களின் கிராமம் அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும். தினமும் பள்ளிக்குச் சென்று வர போதுமான சாலை வசதிகள் இருக்காது. பல கிலோ மீட்டர்கள் காடுகளுக்குள் நடந்துதான் இவர்கள் பள்ளியினை அடைய முடியும். அவர்கள் செல்லும் வழியில் மின்சார வசதியோ சரியான சாலையோ இருக்காது என்பதால்தான் மாணவர்கள் தங்கிப் படிக்க உண்டு உறைவிட பள்ளிகளை கட்டமைத்திருக்கிறார்கள். மாணவ, மாணவிகள் வாரம் முழுவதும் தங்கிப் படித்துவிட்டு, விடுமுறை நாட்களில் தங்களின் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். மூன்று வேளை உணவு மற்றும் தங்குவது எல்லாம் பள்ளியில் தான். இப்படியான சூழ்நிலையில்தான் பல பழங்குடி மாணவ, மாணவிகளும் படித்து முன்னேறி மேற்படிப்பிற்காக வெளியூர்களுக்கும் செல்கிறார்கள்.

தற்போது நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் ஸ்ரீபதி படித்தது அவரின் அம்மாவின் ஊரான ஐவ்வாது மலைப் பகுதியில் உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமம். இவரின் பெற்றோர்கள் காளிதாஸ், மல்லிகா இருவரும் கூலித் தொழிலாளிகள். கிடைக்கும் வேலைகளுக்கு சென்று அதில் வரும் வருமானத்தில்தான் இவரை படிக்க வைத்துள்ளனர். படித்தால் மட்டுமே நம்முடைய நிலை மாறும் என்ற புரிதல் ஸ்ரீபதிக்கு இருந்ததால் நன்றாக படித்துள்ளார். மேலும் அவர்கள் குடும்பத்தில் படித்த முதல் பெண்ணும் இவரே. ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துள்ளார்.

நன்றாக படிக்கும் பெண் என்பதால் பள்ளி ஆசிரியர்களும் இவர் மேல் தனிக்கவனம் செலுத்தி பாடங்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர். ஸ்ரீபதியின் ஊரில் உள்ள பெண்கள் பாதி பேர் பள்ளி படிப்பையே தாண்டவில்லை. மேலும் இங்கு குழந்தை திருமணங்கள் என்பது இயல்பாக நடக்கக்கூடியதாகும். இதைப் பார்த்து வளர்ந்த ஸ்ரீபதிக்கு, தான் கற்ற கல்வி மற்றவர்களுக்கும் பயன்படும்படி இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனாலேயே நீதிபதியாக வேண்டும் என சிறு வயதிலிருந்தே கனவு கண்டுள்ளார். சட்டம் பற்றிய புரிதல் மற்றும் நீதித்துறை மீதான விழிப்புணர்வு இல்லாத கிராமத்தில் இருந்து நீதிபதியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவினை நினைவாக்கியும் உள்ளார்.

12ம் வகுப்பு படித்து முடித்தவுடன் அடுத்து வழக்கறிஞர் படிப்பிற்காக சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருக்கு அங்கு படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எந்த இடத்திற்கு செல்கிறோமோ அங்கு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அதுபோலதான் நகரத்து வாழ்க்கைக்கு தன்னைப் பழக்கிக் கொண்டு படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி நன்றாகவே படித்துள்ளார். 5 ஆண்டு காலப்படிப்பு. ஆனால் இடையில் இவருக்கு திருமணம் பேசி முடிக்கிறார்கள். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பட்டப்படிப்பினை முடித்தாலும், அதன் பின் அவர்கள் கண்ட கனவு கனவாகவே போய்விடும். ஆனால் ஸ்ரீபதியின் கணவர், வெங்கடராமன் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

படிப்பின் அவசியத்தை புரிந்தவர். ஸ்ரீபதியின் நீதிபதி கனவினை புரிந்துகொண்ட வெங்கடராமன் அவரை தொடர்ந்து படிக்க ஊக்குவித்து உறுதுணையாக இருந்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த ஸ்ரீபதி, செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி எடுத்துக்கொண்டார். இதற்கிடையில், கடந்த வருடம் சிவில் நீதிபதி பதவிக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து மனித நேய கலைக்கூடத்தில் பயிற்சி பெற்றார்.

இந்த காலகட்டத்தில் ஸ்ரீபதி கர்ப்பமாகவும் இருந்துள்ளார். அதனால் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகியுள்ளார். அவர் வசிக்கும் புலியூரில் மருத்துவமனை இருந்தாலும் அங்கு எல்லா நேரங்களிலும் மருத்துவர்களும், செவிலியர்களும் இருப்பதில்லை. அதனால் அங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் பிரசவமானது. இவரின் கிராம மக்கள் அனைவரும் 30 கிலோ மீட்டர் தாண்டித்தான் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய நிலை. ஸ்ரீபதிக்கு அறுவை சிகிச்ைச மூலம் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்த நான்கு நாட்களில் நீதிபதிக்கான தேர்வு என்பதால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனையுடன் காரில் சென்னைக்கு பயணித்து தேர்வெழுதிஉள்ளார். அவரின் கடுமையான உழைப்பிற்கு பலனும் கிடைத்துள்ளது. தற்போது சிவில் நீதிபதி தேர்வில் தேர்வாகி தன் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றியுள்ளார். ஜவ்வாது மலையில் இருந்து செல்லும் முதல் பெண் நீதிபதியும் இவர்தான்.

கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு ஸ்ரீபதியே உதாரணம். வெளியுலகத் தொடர்பே இல்லாமல், எந்தவித தொழிநுட்பங்களையும் பயன்படுத்த முடியாத கிராமத்தில் பிறந்த பெண், நாட்டின் நீதித்துறையின் பெரும் பதவியான நீதிபதியாக பதவியேற்பது என்பது சாதாரண விஷயமில்லை. தன்னைப் பார்த்து தன் கிராமப் பெண்களும் படித்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீபதியும் கடுமையான சூழ்நிலைகளை கடந்து படித்து அதில் ஜெயித்திருக்கிறார். அது அவரின் கனவு மட்டுமல்ல… அவரின் ஒட்டு மொத்த சமூகத்தின் கனவு. கல்வி ஒரு சமூகத்தையே மாற்றிவிடும் என்பதற்கு இதுதான் உதாரணம். தன் கனவினை வென்ற பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post நீதிபதியான பழங்குடிப் பெண் appeared first on Dinakaran.

Related Stories: