ஒன்றிய அரசின் 10 ஆண்டில் ஏற்பட்ட ஏற்றம் இதுதானா? கல்விக்கு கொஞ்சம்… போதைக்கு எக்கச்சக்கம்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த சூழ்நிலையில்தான், 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, வீட்டுச் செலவுகள் குறித்த ஆய்வறிக்கையை ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், கல்வியை விட புகையிலை பொருட்களுக்கு அதிகம் செலவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் வேதனை தான் அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகள் மக்களின் சேமிப்பை கரைத்து விடுவதோடு, வருவாயின் பெரும் பகுதி வரிக்கே போய் விடுவதால் குழந்தைகளின் உயர் படிப்புக்கு செலவு செய்ய முடியாமல் திண்டாடி மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தான், பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு மக்கள் அதிகம் செலவு செய்துள்ள விவரம், கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வீட்டுச் செலவுகள் குறித்த ஆய்வறிக்கையின் மூலம் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

2011-12க்கு பிறகு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜூலை வரை இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் 1,55,014 மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,06,732 சுமார் 2.76 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், மேற்கண்ட காலக்கட்டத்தில் பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு செலவிடுவது ஊரகப் பகுதிகளில் 3.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011-12ம் ஆண்டில் இது 3.21 சதவீதமாக மட்டுமே இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல், நகர்ப்புறங்களில் போதைப் பொருட்களுக்கான செலவு 2.43 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும், 2011-12ம் ஆண்டில் இது 1.61 சதவீதமாக மட்டுமே இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கல்விக்கு செலவிடுவது வெகுவாக குறைந்து விட்டது.
அதாவது, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 2022-23 காலக்கட்டத்தில் கல்விக்கான செலவு நகர்ப்புற பகுதிகளில் 5.78 சதவீதமாகவும், ஊரக பகுதிகளில் 3.3 சதவீதமாகவும் உள்ளது. ஆனால், 2011-12ம் ஆண்டில் நகர்ப்புற பகுதிகளில் 6.9 சதவீதமாகவும், ஊரக பகுதிகளில் 3.49 சதவீதமாகவும் இருந்தது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

* விவசாயிகளுக்கு தொடரும் சோதனை
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக பாஜ உறுதி அளித்தது. எனினும், குறைந்த பட்ச ஆதரவு விலை கூட கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், விவசாய குடும்பங்களின் செலவு முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, வேளாண் குடும்பங்களின் மாதாந்திர தனிநபர் செலவினம் ரூ.3,702 ஆக உள்ளது. இது ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் சராசரி செலவான ரூ.3,773ஐ விட குறைவு. விளை பொருட்களுக்கு உரிய விலை கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசின் இரட்டிப்பு வருவாய் வாக்குறுதிக்கு எதிர்மாறாக இந்த புள்ளி விவரம் அமைந்துள்ளது, விவசாயிகளின் தற்போதைய அவல நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

* இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாகும். என ஒன்றிய பாஜ தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடையும் என கணிப்புகளும் வெளியாகியுள்ளன. அரசு தரப்பில் இந்த பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வந்தபோதும், கிராமப்புற வருவாய் குறைவாக உள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு தடையான அம்சம் என்பதை பொருளாதார வல்லுநர்கள் தவறாமல் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

The post ஒன்றிய அரசின் 10 ஆண்டில் ஏற்பட்ட ஏற்றம் இதுதானா? கல்விக்கு கொஞ்சம்… போதைக்கு எக்கச்சக்கம்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: