ஒன்றிய அரசு தமிழகத்தை போதைப் பழக்கம் உள்ள மாநிலமாக மாற்ற நினைக்கிறது: காங். மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!!

கன்னியாகுமரி: பாஜக ஆட்சியில் எல்லா மாநிலங்களிலும் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, ஒன்றிய அரசு தமிழகத்தை போதைப் பழக்கம் உள்ள மாநிலமாக மாற்ற நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மழை வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண நிதியாகக் கேட்டும் ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.கவை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள். இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. தமிழகத்தில் திமுக-வுடன் காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

போதைப் பொருட்கள், ஒன்றிய அரசின் உளவுத்துறை, ரா போன்ற துறைகளில் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு பாஜக தான் காரணம். பாஜக எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்கள். பாஜக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது இதுவரை எத்தனை பேருக்கு கொடுத்துள்ளார்கள்?. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உயரும் என்றது, ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. என்று அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு தமிழகத்தை போதைப் பழக்கம் உள்ள மாநிலமாக மாற்ற நினைக்கிறது: காங். மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: