கோடை காலம் வந்தாச்சி… குளிர்காலத்தில் பயன்படுத்தாத ஏ.சி.யை சர்வீஸ் செய்யாமல் உபயோகித்தால் விபத்து ஏற்படும்: சென்னை மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை


கோடை காலம் வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே வரமுடியாது, வெயிலின் தாக்கம் வெகுவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயில் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வேறு எச்சரித்துள்ளது. சூரியனுக்கு பக்கத்தில் உள்ளதாக பார்க்கப்படும் வேலூராக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என தமிழகத்தின் எந்த ஊராக இருந்தாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்தும் என்பது இப்போதே உறுதியாகிவிட்டது.

அதன்படி, கடந்த ஒரு வாரமாக இரவுகளில் நிலவி வந்த குளிர் படிப்படியாக குறைந்து விட்டது. இப்போது வீடுகளுக்குள் வெப்பம் தகிக்க தொடங்கிவிட்டது. இந்த வெக்கையான நாட்களில் இருந்து விடுதலை தருவதாக அமைவது ஏசிக்கள் தான். வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக குளு குளுவென நம் வீட்டை வைப்பதற்கு கோடை காலங்களில் ஏசி பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் பலரும் ஏசி அறைகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

கோடை காலம் தற்போது தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பலரும் ஏசி ராத்திரி போட்டா, விடிய விடிய ஓடனும் என்பதே விருப்பமாக இருக்கிறது. கடந்த 5, 6 மாதங்களாக பல வீடுகளில் ஏசி பயன்பாடு முற்றிலும் இல்லாமல் இருந்தது. நல்ல குளிர் இருந்ததால் பலர் தங்கள் வீடுகளில் உள்ள ஏசியை பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு இதுவாகத் தான் இருக்கும்.

அதாவது, வெயில் காலத்திற்கு முந்தைய குளிர் காலத்தில் ஏசியை சுத்தமாக உபயோகிக்காமல் விட்டிருப்பார்கள். சும்மாவே ஏசி இருந்திருக்கும். அப்படி பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியை, கோடைகாலம் தொடங்கும் போது கண்டிப்பாக சர்வீஸ் செய்த பின்பே பயன்படுத்த வேண்டும் என்பது ஏசி பராமரிக்கும் நிபுணர்களின் கருத்து. அப்படி சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், மின் கட்டணம் அதிகமாக வந்துவிடும் என்பது ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பில்லாத சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அதாவது, நம்மில் பலருக்கும் ஏசியை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக வீடு, கடைகளில் பயன்படுத்தப்படும் ஏசிகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஏசி இயந்திரங்களை ேகாடை காலம் தொடங்கியதும் அப்படியே பயன்படுத்துவது தான். இதுகுறித்து, பாலவாக்கத்தை சேர்ந்த ஏசி சர்வீஸ் சென்டர் நிபுணர் மகேஷ் கூறியதாவது:

குளிர் காலங்களில் நீண்ட நாட்களாக ஏசி இயந்திரங்கள் நிறுத்தப்படுவதால், அதில் தூசி, துகள்கள் அடைந்து விடும். எனவே அதை சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால் குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். எனவே தான் கரெண்ட் பில் அதிகமாக வருகிறது. அதோடு மட்டுமின்றி சென்னை போன்ற கடலோர பகுதிகளில் ஏசி இயந்திரங்களில் உப்பு படிந்து விடும். அதை திடீரென இயக்கும் போது சார்ட் சர்க்கியூட் ஆகி ஏசி மெஷின் முழுவதும் மின்சாரம் பாயும்.

இதனால் ஏசி இயந்திரங்கள் சில இடங்களில் தீப்பிடித்து விபத்துகளை ஏற்படுத்தி விடுகிறது. முன்பு ஏசி மெஷின்களில் இன்டோரில் மட்டுமே கரண்ட் சர்க்கியூட் இருக்கும். புதிய ஏசிக்கள் அனைத்தும் இன்வெர்ட்டர் ஏசிக்களாகவே உள்ளன. இன்டோர், அவுட்டோர் என இரண்டிலும் கரண்ட் சர்க்கியூட் உள்ளது. இவைகளை நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்து விட்டு திடீரென பயன்படுத்தினால் அதில் பொருத்தப்பட்டுள்ள கெப்பாசிட்டர்கள் எரிய வாய்ப்புள்ளது.

அதன் மூலம் ஏசி மெஷினில் தீ பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். அதை யாரும் செய்வதில்லை. பிரச்னை வந்தால் பார்த்துக் ெகாள்ளலாம் என இருந்து விடுகின்றனர். உபயோகப்படுத்தாமல் இருந்தால் ஏசி யூனிட்களில் பல்லி, கரப்பான் பூச்சி, அனில் உள்ளிட்டவைகள் வசிக்க தொடங்கிவிடும்.

அதனாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குளிர்காலத்தில் பயன்படுத்தாத ஏசியை சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும். அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய பிளக், சுவிட்ச், கேபிளை பயன்படுத்த வேண்டும். இவற்றை எல்லாம் முறையாக செய்தால் ஏசி பாதுகாப்பாக இயங்கும். அறையில் தேவையான அளவு குளிரும் கிடைக்கும். மின்சாரத்தையும் சிக்கனப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* மின்சார சேமிப்பு
ஏசிக்கு 5 ஸ்டார் இருந்தால், அது குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் என அர்த்தம். ஆனால் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே ஏ.சி பயன்பாடு எனும் பட்சத்தில் தாராளமாக 3 ஸ்டார் ஏசியை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்தும்போது நல்ல குளிர்ச்சி கிடைப்பதோடு மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும். இன்வெர்ட்டர் ஏசிகளைப் பொறுத்தவரை சூழலைப் பொறுத்து கம்ப்ரசரின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.

இதன்மூலம் மின்சாரத்தின் தேவை பெரியஅளவில் குறையும். இதை ஆட்டோமெட்டிக்காகவே அவை மேற்கொள்ளும். உதாரணமாக, 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருந்தால், அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்யும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும். இதன் மூலம் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.

* எத்தனை டன் வேண்டும்?
ஏசி வாங்கும் முன் அதன் கொள்ளளவைக் கணக்கிடுதல் அவசியம். அறையின் அளவிற்கு ஏற்ப ஏசி கொள்ளளவு இருக்க வேண்டும். 100 – 120 சதுர அடி அறைக்கு 1 டன் ஏசியும், 120 – 180 சதுர அடி அறைக்கு 1.5 டன் ஏசியும், 180 – 240 சதுர அடி அறைக்கு 2 டன் ஏசியும் கச்சிதமான பொருத்தம்.

* அதீத அழுத்தத்தால் தீப்பிடிக்கும்
சர்வீஸ் சென்டர் நிபுணர்கள் கூறுகையில், ஏ.சிகளில் தரம் உயர்ந்த காப்பரையே பயன்படுத்த வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என அலுமினியத்தை சிலர் பயன்படுத்துகின்றனர். தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தும் ஏ.சிகளில் விபத்து அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. ஒரு ஏ.சியின் கண்டன்ஸரில் உருவாகும் அதீத வெப்பமோ அல்லது கம்ப்ரஸரில் உருவாகும் அதீத அழுத்தமோ தீப்பிடிக்க காரணமாக இருக்கலாம். ஒரு ஏ.சிக்கு வீட்டுக்கு வெளியே கம்ப்ரஸர் மற்றும் கண்டன்ஸர் என இரண்டு அமைப்புகள் இருக்கும்.

இதில் கம்ப்ரஸர் கேஸை அதிக அழுத்தத்தில் கண்டன்ஸருக்கு அனுப்பும். பின்னர் அங்கிருந்து வீட்டுக்குள் இருக்கும் அமைப்புக்குள் வரும் கேஸ் மீண்டும் கம்ப்ரஸருக்குச் செல்லும். ஏ.சி இயங்கும்போது இந்த செயல்பாடு தொடர்ச்சியாக நடைபெறும். கண்டன்ஸர் பகுதி தான் நம் பார்வைக்குத் தெரியும். இந்தப் பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். இந்த அமைப்பில் ஏதாவது பழுது ஏற்பட்டால், தீ விபத்து ஏற்படக்கூடும் என்கிறார்கள்.

The post கோடை காலம் வந்தாச்சி… குளிர்காலத்தில் பயன்படுத்தாத ஏ.சி.யை சர்வீஸ் செய்யாமல் உபயோகித்தால் விபத்து ஏற்படும்: சென்னை மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: