அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது அய்யம்பாளையம் மருதாநதி அணை. இதன் மொத்த உயரம் 74 அடியாகும். தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் அணைக்கு நீர் ஆதாரமாகும். இம்மலைப்பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தற்போது அணையின் நீர்மட்டம் 60.75 அடியாக உள்ளது. அணையில் 112 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடைமடை பாசன பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் வாடி வருவதால் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் அதிகாரிகள் கடைமடை பாசன பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, 2 நாட்களுக்கு மட்டும் மருதாநதி அணையிலிருந்து 40 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணி துறையினர் கூறுகையில், ‘கடைமடை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் நெற்பயிர்களுக்காக அணையிலிருந்து நேற்று முதல் 2 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அடைக்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் 2 நாட்கள் திறக்கப்படும்’ என்றனர். கோரிக்கையை ஏற்று வாடும் பயிரை காப்பாற்ற அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

The post அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: