பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் துவக்கம்

ஊட்டி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி, வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதன்படி நீலகிரி மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி கலெக்டர் அலுவலகம், ஊட்டி, குன்னூர், குந்தா உள்ளிட்ட 6 வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது, தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 தாலுகாக்களில் உள்ள தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை சுமார் 400 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 10 மாதங்களுக்கு முன்னதாக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்கள் ஏற்று கொண்ட கோரிக்கைகள் மீது மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிட வேண்டும். 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் செய்ய விதித்திருத்த அரசாணையை வெளியிட வேண்டும்.

அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உயிர் ஆபத்துமிக்க பல பணிகளை மேற்கொண்டுவரும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடன் வழங்க வேண்டும். பொது மக்களுக்கான சான்றிதழ் வழங்க துணை தாசில்தார் பணியிடம், 2024 நாடாளுமன்ற தேர்தல் நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுக்கான கால அவகாசம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முறையாக செய்ய வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை இன்னும் சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த பணிகளை மேற்கொள்ளவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கனவே கவன ஈர்ப்பு போராட்டம், காத்திருப்பு போராட்டம் முடிந்துள்ளதால், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க வைரவிழா ஆண்டில் அனைத்து கோரிக்கைகள் மீது தீர்வு எட்டப்படும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும், என்றனர். வருவாய்த்துறை ஊழியர்களின் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: