வட கோவை ரயில்வே ஸ்டேஷன் ரூ.11.50 கோடியில் சீரமைப்பு

 

கோவை, பிப்.28: வட கோவை ரயில் நிலையம் அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையம் என்எஸ்ஜி 6 என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் இரண்டு நடைமேடைகள் உள்ளது. இந்த நிலையத்தில் 29 ரயில்கள் நிறுத்த வசதியுள்ளது. காந்திபுரம், குறுக்கு சாலை மற்றும் 100 அடி சாலைக்கு அருகில் உள்ள வணிக பகுதிக்கு மிக அருகில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, டாடாபாத், பாப்பநாயக்கன்பாளையம், ரத்தினபுரி, சிவானந்தா காலனி, காந்திபுரம், பூமார்க்கெட் போன்ற பகுதிக்கு அருகில் உள்ளது.

பிரதான ரயில் நிலையமாக மாறி வரும் வடகோவை சீரமைப்பு திட்டத்திற்காக 11.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் பணிகள் நுழைவு, வெளியேறு, பயணிகள் முனைய கட்டடங்கள், பார்க்கிங், காத்திருப்பு கூடங்கள், கழிப்பறைகள், லிப்ட் வசதி, மேல் பாலம் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள சில வசதிகளை மேம்படுத்தும் பணி நடக்கிறது.

ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவியாக இரண்டு கூடுதல் நடைமேடைகள் உடனடியாக கட்டப்பட வேண்டும், கூடுதல் பிளாட்பாரங்கள் கட்டவேண்டும். கண்ணூர், ஷோரனூர், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் மதுரைக்கு செல்லும் ரயில்கள் வடகோவை ஸ்டேஷனில் இருந்து புறப்படும்போது கூடுதல் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும். கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில் வட கோவை ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், ரயில்கள் நிறுத்தத்தை உடனடியாக வழங்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

The post வட கோவை ரயில்வே ஸ்டேஷன் ரூ.11.50 கோடியில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: