கோவை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு டி.சி. அளித்த பள்ளி

 

கோவை, ஜூன் 15: கோவை வெரைட்டிஹால் சாலை அருகே அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் 9-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால், பள்ளி நிர்வாகத்தினர் மாணவிக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து வெளியேற்றி உள்ளனர். பின்னர், மாணவி பல பள்ளிகளில் சேர முயன்றும் இடம் கிடைக்காத நிலையில் மாணவியின் கல்வி கேள்விக்குறியானது.

இந்நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினருடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவி பெற்றோருடன் மனு அளித்தனர். மாணவி அளித்த புகார் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளியை தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்க கோரிய நிலையில் மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், மாணவர்கள் பாதிக்கப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலகத்தை அணுகி புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் 10-ம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சியை பெற வேண்டி ஒன்பதாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்கி வருகின்றனர். அவ்வாறு நீக்கப்படும் மாணவர்களுக்கு வேறு பள்ளியிலும் இடம் கிடைக்காததால் அவர்களது கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில தனியார் பள்ளிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கோவை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு டி.சி. அளித்த பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: