தேசிய அளவிலான வூசு போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோவை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

கோவை, ஜுன் 16: கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியில், தேசிய அளவிலான கேலோ இந்தியா பெண்களுக்கான வூசு போட்டி கடந்த ஜுன் 10ம்தேதி துவங்கி, 4 நாட்கள் நடந்தன. இப்போட்டியில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளாக இப்போட்டி நடந்தது. இதில், தமிழ்நாடு அணியில், கோவை, வேலூர், சேலம், திண்டுக்கல், சென்னை, தஞ்சை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்று விளையாடினர். சான்சூ, டாவ்லூ ஆகிய இரு பிரிவு போட்டியில் கோவையை சேர்ந்த வீராங்கனைகள் 6 தங்கம், ஒரு வெண்கலம் வென்று அசத்தினர்.

இதேபோல், தமிழ்நாடு அணி அனைத்து பிரிவு போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச்சென்றது. தமிழ்நாடு அணிக்கு, தமிழ்நாடு வூசு விளையாட்டு சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்த கோவை மாவட்ட வீராங்கனைகள் நேற்று கோவை திரும்பினர். அவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில், தமிழ்நாடு வூசு விளையாட்டு சங்க செயலாளர் ஜான்சன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட வூசு சங்க தலைவர் கணேசன், பயிற்சியாளர்கள் முத்துராஜ பாரதி, முத்தமிழ்அரசு, ஆஷிக் உள்பட பலர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post தேசிய அளவிலான வூசு போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோவை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: