பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு நில எடுப்பு அலுவலகம் முற்றுகை: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 581 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பினை தொழில் முதலீட்டு கழகம் நாளிதழ்களில் வெளியிட்டது. இது சுற்று வட்டார கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் காஞ்சிபுரம் பொன்னேரிக் கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நில எடுப்பு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி ஏகனாபுரம், பொடவூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து டிராக்டரில் பேரணியாக புறப்பட்டு காஞ்சிபுரம் பொன்னேரிக் கரை பகுதியில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதில் 126விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு நில எடுப்பு அலுவலகம் முற்றுகை: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: