மாசி மாத பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்

பொன்னை, பிப்.24: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரமோற்சவ விழாவின் 4ம் நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசி மாதத்தில் விமரிசையாக நடைபெறும் பிரமோற்சவ தேர்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

தொடர்ந்து, முதல் நாள் தேரோட்டம் கடந்த 20ம் தேதி கோலாகலமாக நடந்தது. அன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து தேரோட்டம் துவங்கியது. மாலை 6.30 அளவில் சின்ன கீசக்குப்பம் துண்டுகரை அருகே தேர் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 21ம் தேதி 2ம் நாள் தேரோட்டம் நடந்ததும் மாலை சோமநாதபுரம் மலை தோப்பு பகுதியிலும், நேற்று முன்தினம் 3ம் தேரோட்டம் நடந்ததும் மாலை மேல்மலைபுரம் பெருமாள்குப்பம் கிராமம் அருகேயும் தேர் நிலை நிறுத்தப்பட்டது. பிரமோற்சவ தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று மாலை 4.30 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்ததும் தேரோட்டம் துவங்கியது.

இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அரோகரா பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர், மாலை 6.40 மணிக்கு வள்ளிமலை தேரடி பகுதியில் தேர் நிலையை அடைந்தது. அப்போது, கடந்த 4 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் சுவாமிக்கு படையலிட்டு, குடும்பத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், விழாவில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உட்பட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பொன்னை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று அதிகாலை வேடம்புரி உற்சவமும், காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் மேஷ லக்கினத்தில் வள்ளி- முருகன் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, இன்று மாலை கோயில் அருகே சரவண பொய்கை தெப்பக்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. நாளை 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

The post மாசி மாத பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: