மீஞ்சூர் அருகே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடை திருவிழா: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயற்கை மற்றும் அங்கக விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து அதானி காட்டுபள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை – அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் மூலம் இயற்கை முறையில் விளைந்த நெல்தானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு வர்த்தகர்களின் தேவைப்படி ஒன்றிய அரசின் அங்கக சான்று பெற ஏதுவாக நடப்பு 2023-24ம் நிதி ஆண்டில் 4 ஊராட்சிகளைச் சார்ந்த 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு 126.28 ஏக்கர் பரப்புள்ள பகுதியில் பயிரிட தமிழ்நாடு அரசு அங்கக சான்று துறையில் பதிவு செய்யப்பட்டு அங்கக நெல் சாகுபடியில் அங்கக விவசாய முறைகள் மேற்கொள்ளப்பட்டது.

இயற்கை இடு பொருட்களான பசுந்தாழ் உர விதைகள், உயர் விளைச்சல் நெல் ரக விதைகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்கள். ஜிங் சல்பேட் ஆகியவை வழங்கப்பட்டு பஞ்சகாவியா முதலான இயற்கை முறைகளை தயாரிக்கவும் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கக (இயற்கை) விவசாயத்தை கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் பின்பற்றி நல்ல லாபம் ஈட்டும் பொருட்டு இயற்கை விவசாயிகளின் உற்பத்தி நிறுவனம் ஒன்று வருகின்ற 2024-25 நிதி ஆண்டில் நிறுவிட அதானி அறக்கட்டளை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 விவசாய தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாய முறைகளை கையாள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது நெற்பயிர் அறுவடை நடைபெற்று காட்டூர் கிராமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன் தலைமை தாங்கினார். விவசாயி செல்லப்பன் அனைவரும் வரவேற்றார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், நெய்த வாயல் பாலன், முன்னாள் தலைவர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் நந்தினி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், பொன்னேரி சப் – கலெக்டர் சாகே சன்கேத் பல்வந்த் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.

இதில் அங்கக சான்று துறை இயக்குநர் சுரேஷ், அதானி காட்டுபள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகம் தலைமை செயல் அதிகாரி கேப்டன் மதன்மோகன், தென்னிந்திய அறக்கட்டளை தலைவர் அணில் பாலகிருஷ்ணன், திட்ட மேலாளர் ஜேசுராஜ், நரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன், ஹேம்நாத், குமரன், காட்டூர் இருசப்பன், ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தான லட்சுமி கிராம நிர்வாக அலுவலர் நல்லீஸ்வரன் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை வேளாண்மை துறை, கிராம நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி செயலர், காட்டூர், கடப்பாக்கம், தத்தமஞ்சி, கொரஞ்சூர் ரெட்டிபாளையம், ஏ.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் அருகே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடை திருவிழா: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: