ஐவேலி அகரத்தில் உள்ள மதுபான கூடத்தில் விதியை மீறி மது விற்பனை செய்த இருவர் கைது: 151 மது பாட்டில்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலக்காஞ்சேரி ஐவேலி அகரத்தில் டாஸ்மாக் கடை அருகில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளின் படி டாஸ்மாக் கடை திறக்கும் நேரமான 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானக் கூடமும் திறக்க வேண்டும் என்பது உத்தரவாகும். இந்நிலையில் தலக்காஞ்சேரி ஐவேலி அகரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்வதாக திருவள்ளூர் எஸ்பி. சீனிவாசப் பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட சிறப்பு காவல் பிரிவு போலீசார் நேற்று காலை 7.15 மணிக்கு திருவள்ளூர் தலக்காஞ்சேரி சாலை ஐவேலி அகரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் (8764) அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபான கூடத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் விற்பனையில் ஈடுபட்டிருந்தது வேப்பம்பட்டு காந்தி வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்த சந்திரசேகரன்(45) மற்றும் சின்ன காஞ்சிபுரம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுதர்சன்(44) என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட சந்திரசேகரன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரையும் கைது செய்த மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த பீர் (11 கேஸ்) 132, பிராந்தி குவார்ட்டர் பாட்டில் 19 என மொத்தம் 151 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஐவேலி அகரத்தில் உள்ள மதுபான கூடத்தில் விதியை மீறி மது விற்பனை செய்த இருவர் கைது: 151 மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: